மத்திய வங்கி பிணை முறி விசாரணை அறிக்கை மூடி மறைக்கப்பட மாட்டாது எனவும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற் குழு பிரேரித்ததற்கமையவே ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டதாகவும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
எனது வாளுக்கு இரையாகப் போவது எனது கட்சி நபரா ? எதிர்க்கட்சி நபரா? என்று பார்க்க மாட்டேன் என ஜனாதிபதி கூறியிருக்கிறார். தவறு செய்தால் தராதரம் பாராது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெளிவாக கூறியிருக்கிறார்.
சுருக்குமுறையற்ற விசாரணை முடிவடைந்துள்ளது. அடுத்து சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்படும். இதனை சட்டமா அதிபருக்கு கையளிக்கத் தேவையில்லை. நேரடியாகவே வழக்குத் தொடர முடியும்.
ஆணைக்குழு தலைவர் உச்ச நீதிமன்ற நீதியரசர் என்பதால் தௌிவாக தனது அறிக்கையில் முடிவு வழங்கியுள்ளார். மீள விசாரணை நடத்தத் தேவையில்லை. குற்றவாளிகளை தண்டிக்கும் நடவடிக்கையே அடுத்து எடுக்கப்படும். இந்த அரசாங்கத்தில் எவருக்கும் திருட முடியாது.
திருட்டுக்கு எதிராகவே இந்த அரசாங்கம் உருவாக்கப்பட்டது. இந்த அரசாங்கத்தில் திருடவோ திருட்டுக்கு உதவவோ இடமளிக்க முடியாது எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.