திருடர்களை பிடிப்பதாக கூறிய ரணில் உள்ளிட்ட அனைவரும் திருடர்களோடு பந்தி அமர்கின்றனர்-அனுர

18957 50
மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி நாட்டில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடியாகும். இந்த மோசடி குறித்து நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை கடந்த 31ம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் நாம் அவதானத்துடன் இருக்கின்றோம். ஏனென்றால் மக்களின் பணத்தைக் கொண்டு அமைக்கப்பட்ட ஆணைக்குழுவே மக்களின் பணம் தொடர்பில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை நடத்தியது.

ஆகவே பொது மக்களுக்கு இந்த அறிக்கை தொடர்பில் அறிந்து கொள்வதற்கு பூரண உரிமையுள்ளது என ஜே.வி.பி.யின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பெப்ரவரி மாதம் 10ம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் ஜே.வி.பி ஏற்பாடு செய்த பொது கூட்டம் ஒன்று இன்று (02) காலை 11 மணியளவில் கொட்டகலை டெரிக்கிளயார் தோட்டத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் இடம்பெற்ற 17 பாரிய ஊழல் மோசடி தொடர்பான அறிக்கைகளும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இவை தொடர்பான உண்மையான தகவல்களை, வெளியிடுமாறு நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.

அதேபோல் இந்த பிணைமுறி தொடர்பான விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை தெளிவுபடுத்துமாறு ஜனாதிபதியின் செயலாளரிடம் இன்று நாம் மனு ஒன்று கையளித்தோம்.

அந்த மணு தகவல் அறியும் சட்டமூலத்திற்கு அமைவாகவே கையளிக்கப்பட்டுள்ளது. எனவே அது தொடர்பில் அறிந்து கொள்வதற்கான உரிமை எமக்கு உள்ளது. மேலும் தேர்தல் காலங்களில் ஊடகங்களின் செயற்பாடு தொடர்பில் பல்வேறு அழுத்தங்கள் விடுக்கப்படுகின்றன.

எனவே அவ்வாறான அழுத்தங்களுக்கு அப்பால் நடுநிலையான செய்தி அறிக்கையிடலை மேற்கொள்ள வேண்டும் என நாம் ஊடகங்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம். உள்ளளூராட்சி மன்றங்களே ஊழலுக்கு எதிராக செயற்படுவதற்கான சிறந்த களம். இதனால் உள்ளூராட்சி மன்றங்கள் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்

நாடு இன்று எங்கே செல்கின்றது. டக்ளஸ் தேவானந்தவிற்கும், அமைச்சர் மனோ கணேஷனுக்கும், திகாம்பரத்திற்கும் எந்த பிரச்சினையும் இல்லை. நாட்டு மக்களுக்கு பிரச்சனை உள்ளது. தற்போதைய மைத்திரி, ரணில் தலைமையிலான அரசாங்கம் திருடர்களை பிடிப்பதாக கூறியே ஆட்சிக்கு வந்தது. ஆனால் இங்கு ரணில் விக்கிரமசிங்க திருடர்களுக்கு பாதுகாப்பாக மாறியுள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவும் திருடர்களை பாதுகாக்கவே முயற்சிகின்றார். முன்பு மஹிந்த ராஜபக்ஷவும் திருடர்களை பிடிப்பதாக கூறி ஆட்சிக்கு வந்து, பின்னர் அவரும் பொது சொத்துகளை துஷ்பிரோயகம் செய்தார்.

1994ல் ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் ஊழல் நடப்பதாக கூறியே சந்திரிக்காவும் ஆட்சிக்கு வந்தார். ஆனால் என்ன நடந்தது. ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் ஊழலில் ஈடுபட்டவர்களை காலி முகத்திடலில் பகிரங்கமாக தூக்கில் ஈடுவதாக கூறிய சந்திரிக்கா. அவ்வாறு நடந்து கொண்டாரா இல்லை. ஆகவே இவர்கள் எல்லோரும் ஊழலை தடுப்பதாக கூறியே ஊழல் செய்கின்றனர்.

அமைச்சர்கள் பதவி பிரமாணம் செய்யும் போது ஊழலில் ஈடுப்படுவதில்லை என கூறியே சத்தியபிரமாணம் செய்கின்றனர். அதேபோல் எதிர்காலத்திலும் சத்தியபிரமாணம் செய்வர். இந்த அமைச்சர்கள் மீண்டும் வந்தால் தொடர்ந்தும் ஊழலை தடுப்போம் என கூறி பொய் வாக்குறுதியை அளித்தே ஆட்சியில் அமர்வர்.

இன்றைய மைத்திரி தலைமையிலான அரசாங்கத்திலும் எஸ்.பீ.திஸாநாயக்க, நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த, டிலான் பெரேரா உட்பட இன்னும் பலர் பொது மக்களின் சொத்துகளை சூறையாடுகின்றனர்.

எனவே திருடர்களை பிடிப்பதாக கூறிய ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அனைவரும் திருடர்களோடு பந்தி அமர்கின்றனர் என்றார்.

Leave a comment