அரச அதிகாரிகள் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு, வெளிப்படைத்தன்மையுடன் மக்களுக்கு சேவையாற்றுவதன் மூலமே அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற்திட்டங்களின் தூய்மைநிலை மேலோங்கும் என ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
முறையான திட்டமிடலுடன் சினேகபூர்வமாக மக்களுக்கு சேவையாற்ற வேண்டியது அரச உத்தியோகத்தர்களின் பொறுப்பாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மலர்ந்துள்ள புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் இன்று (02) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி செயலக ஆளணியினருடன் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரச நிறுவனங்களுக்கிடையில் சிறந்த தொடர்புகள் பேணப்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து இதன்போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதியின் செயலாளர், சிறந்த எண்ணங்களின் மூலம் அரச சேவையின் வினைத்திறனை மேம்படுத்துவதற்கு ஒன்றிணைந்து செயற்படுமாறு மலர்ந்துள்ள
புத்தாண்டில் சகல அரச உத்தியோகத்தர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார்.
புத்தாண்டில் கடமைகளை ஆரம்பித்து வைக்கும் முகமாக ஜனாதிபதியின் செயலாளர் தேசியக்கொடியை ஏற்றி வைத்ததன் பின்னர் அரச சேவை உறுதிமொழி செய்யப்பட்டது.
ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட ஆளணியினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.