வலி வடக்கு, தையிட்டி பகுதியில் நடைபெற்று வரும் மீள் குடியேற்ற நடவடிக்கைகளை வட மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல் அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
இனவழிப்பு யுத்தம் காரணமாக கடந்த 27 ஆண்டுகள் சொந்த மண்ணை விட்டு அகதிகளாக அல்லல்பட்டுவரும் வலி வடக்கு மக்கள் மீள் குடியேற்றம் என்ற பெயரில் மீண்டும் பெரும் இன்னல்களுக்கு ஆளாகிவரும் நிலையில் தையிட்டி பகுதியில் நடைபெற்றுவரும் மீள் குடியேற்ற நடவடிக்கைகளை 29.12.2017 அன்று நேரில் சென்று பார்வையிட்டுள்ளார் அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள்.
கால் நூற்றாண்டு கடந்த இடப்பெயர்வு காலவெளியில் தன்னியல்பாக குடிப்பரம்பலில் ஏற்படும் அதிகரிப்பு காரணமாக சொந்தமாக காணிகள் இல்லாததுடன், தற்காலிக முகாம்களில் வசித்துவந்த மயிலிட்டியைச் சேர்ந்த 38 குடும்பங்களின் மீள் குடியேற்றத்திற்காக, தையிட்டி பகுதியில் விடுவிக்கப்பட இடத்தில் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகளை அளவீடு செய்யும் பணி 29.12.2017 அன்று நடைபெற்றது. அப்போது அங்கு சென்ற அமைச்சர் மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். அத்துடன் அத்தியாவசியமாக தேவைப்படும் குடிநீர் கிடைப்பதற்குரிய ஏற்பாடுகளை உடனடியாக செய்து கொடுப்பது குறித்து அங்கிருந்தவாறே உரிய அதிகாரிகளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனைகள் நடத்தியிருந்தார்.
மீள் குடியேற்ற நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் மக்கள் தமது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றித்தருமாறு அமைச்சரிடம் கோரிக்கை கடிதம் கையளித்திருந்தனர். இது தொடர்பாக, 29.12.2017 அன்று மாலை நடைபெற்ற வட மாகாண அமைச்சர் வாரியக் கூட்டத்தின் போது கௌரவ முதலமைச்சர் அவர்களுக்கு தெரியப்படுத்தியதுடன் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஆவன செய்யுமாறு கேட்டுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.