சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் சந்திக்க தயார்: ஜெயக்குமார்

486 18

சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால் சந்திக்க தயார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னை கொருக்குப்பேட்டை, இளைய தெருவில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலய ஆண்டு விழா நிகழ்ச்சியை தொடங்கி வைத்த அமைச்சர் ஜெயக்குமார் பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசியல் அவதாரம் எடுத்துள்ள ரஜினிகாந்த் ஆன்மிக அரசியல் குறித்து தெளிவு படுத்த வேண்டும். அரசியல் கட்சிகள் எல்லாம் பல்வேறு கொள்கைகளுடன் உள்ள நிலையில், ஆன்மிக அரசியல் என்றால் என்ன என்பது குறித்து அவர் விளக்கம் தர வேண்டும்.

தி.மு.க.வின் சகாப்தம் முடிந்து விட்டது. அ.தி.மு.க. ஆட்சியை கலைத்து விடலாம் என்று கனவு காணும் ஸ்டாலின், சுயேச்சை எம்.எல்.ஏ. தினகரன் ஆகியோரின் கனவு ஒருநாளும் பலிக்காது. 2021-ல் தான் தமிழகத்தில் பொதுத்தேர்தல் வருமே தவிர, இடையில் ஆட்சியை கலைக்க முடியாது.

சட்டமன்றத்தில் எந்த நேரத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தாலும் அதனை சந்திக்க தயார். பெருவாரியான அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் எங்கள் பக்கம் இருப்பதால் எங்களுக்கு பயம் இல்லை. ஆர்.கே.நகரில் ஜெயலலிதா விட்டுச்சென்ற பணிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.

ஒக்கி புயலால் மீனவர்கள் காணாமல்போனதை அடுத்து, இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதற்காக அனைத்து விசைப்படகுகளிலும் டிரான்ஸ்பாண்டர் கருவி பொருத்தப்படும். இதனால் செயற்கைகோள் மூலம் தமிழக அரசும், மத்திய அரசும் மீனவர்கள் எத்தனை நாட்டிக்கல் மைல் தொலைவில் உள்ளார்கள் என்பதை கண்டறியலாம்.

தமிழகத்தில் பதிவு செய்த 5,800 விசைப்படகுகளும், பதிவு செய்யப்படாத 1,200 விசைப்படகுகளும் இருக்கின்றன. அவற்றையும் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். முதல் கட்டமாக 150 விசைப்படகுகளுக்கு டிரான்ஸ்பாண்டர் கருவி வழங்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்குள் 7 ஆயிரம் விசைப்படகுகளிலும் இவை பொருத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment