தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சபாநாயகர் தரப்பில் விளக்கம் அளிக்கவேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சென்னை ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழக சட்டசபையில் எதிர்கட்சியின் குரல் வளையை நெரிக்கும் விதமாக ஆளும் கட்சியினர் தந்திரமாக செயல்படுகின்றனர். கடந்த ஆகஸ்டு மாதம் 17-ந்தேதி நானும், எங்கள் கட்சியை சேர்ந்த உறுப்பினர்களும் சட்டசபை கூட்டத் தொடரில் கலந்து கொண்டோம். அப்போது ஆளும் கட்சியை சேர்ந்த ஒரு உறுப்பினர், நான் மேற்கொண்ட நமக்கு நாமே பயணம் குறித்து சில கருத்துக்களை தெரிவித்தார்.
அதற்கு நானும் சில கருத்துக்களை தெரிவித்தேன். என்னுடைய கருத்துக்களை அவைக் குறிப்பில் இருந்து நீக்கிய சபாநாயகர், ஆளும் கட்சி உறுப்பினரின் கருத்தை நீக்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எங்கள் கட்சியை சேர்ந்த உறுப்பினர்களை ஒரு வாரத்துக்கு இடைநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இடைக்கால தடை விதிக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இதேபோல, மதுரை மத்திய தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ., பி.டி.ஆர்.தியாகராஜன் தனியாக ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘கடந்த 17-ந்தேதி நான் சட்டப்பேரவைக்கு சென்றேன். சம்பவம் நடக்கும் போது நான் அவையில் இல்லை. ஆனால், பிற தி.மு.க. உறுப்பினர்களை இடைநீக்கம் செய்த உத்தரவில், என் பெயரையும் சேர்த்து விட்டனர்’ என்று கூறியிருந்தார்.
இந்த 2 வழக்குகளும் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி மகாதேவன் ஆகியோர் முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, சபாநாயகரின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டனர்.தலைமை செயலாளர், சட்டசபை செயலாளர், சபாநாயகர் ஆகியோர் இந்த வழக்கில் தாக்கல் செய்யும் பதில் மனுவின் அடிப்படையில் தகுந்த முடிவினை இந்த ஐகோர்ட்டு எடுக்கும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டசபை செயலாளர் சார்பில் மூத்த வக்கீல் குமார் ஆஜராகி, ‘இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும்’ என்று கூறினார். அதற்கு நீதிபதிகள், இந்த வழக்கில் சபாநாயகர் சார்பில் யாராவது ஆஜராகியுள்ளனரா?’ என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு, வக்கீல்கள் இல்லை என்று கூறினார்கள்.
இதையடுத்து நீதிபதிகள், ‘இந்த வழக்கில் சட்ட கேள்விகள் பல எழுந்துள்ளன. எனவே, இந்த வழக்கில் சபாநாயகரும் தன் தரப்பு விளக்கத்தை அளித்தால் விரிவான விவாதங்களை மேற்கொள்ள முடியும். எனவே, சபாநாயகரையும், இந்த வழக்கு விசாரணையில் கலந்து கொள்ளும்படி சட்டசபை செயலாளர் அறிவுறுத்தவேண்டும்’.
‘இந்த வழக்கு விசாரணையை வருகிற அக்டோபர் 19-ந்தேதிக்கு தள்ளி வைக்கிறோம். அதற்குள் அனைத்து தரப்பினரும் தங்களது பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.