வடக்கின் மரணங்களுக்கு அமானுசிய சக்தி அல்ல!

367 2

கடந்த மூன்று மாதக் காலப்பகுதியில், யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் இடம்பெற்ற பொதுமக்களின் மரணச் சம்பவங்களுக்கு, அமானுசிய சக்திகள் காரணமல்லவென அறிவித்துள்ள சுகாதார அமைச்சு, அம்மாகாணத்தில் பரவி வரும் நோயொன்று காரணமாகவே, இம்மரணங்கள் சம்பவித்துள்ளன என்றும் தெரிவித்துள்ளது.

குறித்த பிரதேசங்களில், அடையாளம் காணப்படாத காரணங்களால் மரணங்கள் சம்பவித்ததன் காரணமாக, இவற்றுக்கு அமானுசிய சக்திகளின் நடவடிக்கைகளே காரணமாக அமைந்தனவென, வதந்திகள் பரவின. இருப்பினும், இதில் எவ்வித உண்மையும் இல்லையென, அமைச்சு அறிவித்துள்ளது.

இம்மரணங்கள் குறித்து நடத்தப்பட்ட முறையான பரிசோதனைகளை அடுத்தே,  பிரதேசத்தில் பரவி வந்த தொற்று நோய் காரணமாக, இந்த மரணங்கள் சம்பவித்தனவென அடையாளம் காணப்பட்டதாக, அமைச்சு மேலும் தெரிவித்தது.

யாழ்.நகரின் மத்தியில் உள்ள சிற்றங்காடியில், அமானுசிய சக்திகள் உலாவுவதாக, வியாபாரிகள் பீதியடைந்துள்ள நிலையில், யாழ்.மாநகர சபையினர் விசேட சாந்தி பூஜைகளையும் செய்தனர்.

யாழ். மத்திய பஸ் நிலையத்துக்கு அருகில், மாநகர சபையால் புதிதாக அமைக்கப்பட்ட சிற்றங்காடி கடைத்தொகுதியில், அமானுசிய சக்திகளின் நடமாட்டம் உள்ளதாகவும் அதனால், கடந்த மூன்று மாதகாலப் பகுதியில், வியாபாரிகள் உட்பட வியாபாரிகளின் நெருங்கிய உறவினர்கள் என ஒன்பது பேர் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்த சிற்றங்காடி வியாபாரிகள், அமானுசிய சக்திகள் தொடர்பில் பீதியில் உறைந்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்திருந்த யாழ். மாநகர ஆணையாளர் கூறியிருந்ததாவது,

“நாம் பேய், பிசாசு, ஆவிகளை நேரில் கண்ணால் காணாவிட்டாலும், அது தொடர்பில் எம்மவர் மத்தியில் உள ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் தாக்கங்கள் உள்ளன. ஆரம்ப காலம் முதலே, அது தொடர்பான நம்பிக்கைகள் மனதளவில் உள்ளன. அதனால் மனங்களில் தாக்கங்கள் உள்ளன. எனவே, வியாபாரிகள் தற்போது உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். வியாபாரிகளின் உள ரீதியான பாதிப்பைப் போக்குவதற்கு, சிற்றங்காடியில் விசேட சாந்தி பூஜை செய்யப்பட்டது” என்றார்.

இந்நிலையிலேயே, குறித்த மரணங்களுக்கு தொற்று நோயே காரணமென அறிவித்துள்ள சுகாதார அமைச்சு, அமானுசிய சக்திகள் தொடர்பில் பீதியடைய வேண்டாமெனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

Leave a comment