எதிர்காலத்தில் எனது அரசியல் பயணம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்கின்ற நதியினூடாக ஓடும். ஓட்டமாவடி பிரதேச சபை முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ். ஹமீட்

5836 0

எதிர்காலத்தில் எனது அரசியல் பயணம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்கின்ற நதியினூடாக ஓடும் என மட்டக்களப்பு ஓட்டமாவடி பிரதேச சபை முன்னாள் தவிசாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து விலகி புதன்கிழமை (ஜுன் 22, 2016) ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸில் இணைந்து கொண்டவருமான கே.பி.எஸ். ஹமீட் தெரிவித்தார்.
DSC05809

மட்டக்களப்பு – ஓட்டமாவடியில் நிருமாணிக்கப்பட்டுள்ள நவீன மீன் சந்தைக் கட்டிடத் தொகுதி புதன்கிழமை (ஜுன் 22, 2016) மாலை கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டினால் திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில் ஹமீட் மேடையேறி தான் உத்தியோகபூர்வமாக ஸ்ரீலமுகா வில் இணைந்து கொண்டுள்ளதாக பொதுமக்கள் முன்னிலையில் அறிவித்தார்.

அதன் பின்னர் அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஹமீட்;, அகில இலங்கை மக்கள் காங்கரஸ் கட்சியின் பிரதிநிதியாகவிருந்து அரசியல் செய்து கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளராகவும் மக்களுக்கு முடிந்தளவு சேவை செய்து வந்த நான் இப்பொழுது ஸ்ரீலமுகா வில் இணைந்துள்ளேன்.

DSC05815

ஸ்ரீலமுகா கட்சியின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான நஸீர் அஹமட் அவர்களின் வழிநடத்தலில் கட்சித் தலைமையுடன் இணைந்து இந்த கல்குடாத் தொகுதியில் ஸ்ரீலமுகா பலப்படுத்துவதற்கான செயற்பாடுகளைச் செய்யுமாறு பிரதேச மக்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க நான் இக்கட்சியில் இணைந்துள்ளேன்.

என்னைப் பொறுத்தவரையிலும் கடந்த காலத்தில் நான் இருந்த அணியுடன் இந்த கல்குடாத் தொகுதியில் அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்காக முழுமையாகப் பாடுபட்டுள்ளேன்.

அந்த வகையில் என்னைத் துரோகி என்று யாரும் விமர்சிக்க முடியாது. இனியும் என்னை துரோகி என விமர்சிக்க முடியாது. ஏனெனில் நான் இறுதி மூச்சுவரை இந்த கல்குடாத் தொகுதி மக்களின் அரசியல் சமூக பொருளாதார அபிவிருத்தி நலன்களுக்காகவே பாடுபடுவேன் என்பதை அறுதியிட்டுக் கூறுகின்றேன்.

DSC05818

அரசிலுக்கு வருகின்றவர்கள் மக்களாலேயே பிரதேச சபை உறுப்பினர், தவிசாளர், மாகாண சபை உறுப்பினர், மாகாண சபை அமைச்சர், முதலமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், பிரதியமைச்சர், அமைச்சர் என்ற பதவி அந்தஸ்தை அடைகிறார்கள். இவை முழுக்க முழுக்க மக்களால் வழங்கப்பட்ட பதவி அந்தஸ்துகள். எனவே, அந்தப் பதவிகளை அடைந்து கொள்கின்ற அரசியல்வாதிகள் மக்களை மதித்து மக்களுக்கு கௌரவமளிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

அப்படிப்பட்ட, மக்களை மதிக்கின்ற உயர் பண்புகள் பிரதேச அரசியல்வாதிகளிடம் இல்லாதிருப்பது கவலையளிக்கின்றது.

DSC05864

நான் கடந்த காலத்தில் செய்த ஊழலை மறைப்பதற்காகவே இப்பொழுது ஸ்ரீலமுகா வுக்கு தாவியிருக்கின்றேன் என்று இப்பொழுது மலினமாகக் கதைகட்டி விட்டிருக்கின்றார்கள் என்று கேள்விப்படுகின்றேன். ஆனால், நான் எப்படி இந்த மக்களோடு நடந்து கொண்டேன் என்பதற்கு எனக்கு வாக்களித்தவர்களும் வாக்களிக்காத மக்களும் சாட்சியாக இருக்கின்றார்கள்.

நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஊழல் செய்து மக்களை மதியாது மக்களை மிதிக்கின்ற அரசியல்வாதியல்ல.

எனது பிரதேச சபை தலைமைத்துவத்தின் கீழ் மக்களை கௌரவப்படுத்தி சேவை செய்திருக்கின்றேன்.

எதிர்காலத்தில் என்ன சூழ்ச்சிகள் வந்தாலும் அவற்றை முறியடித்து கல்குடாத் தொகுதி மக்களின் வளர்ச்சிக்காக ஸ்ரீலமுகா வுடன் எனது அரசியல் பயணம் தொடரும்.” என்றார்.

Leave a comment