நாம் வெளிப்படுத்தும் உன்னத அர்ப்பணிப்பும் உறுதிப்பாடுமே எம்மை வெற்றியை நோக்கி இட்டுச் செல்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி விடுத்துள்ள புதுவருட வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஒவ்வொரு கணமும் எம்மை அறிவாலும் அனுபவத்தாலும் பரிபூரணப்படுத்தும் அதேவேளை, மலரும் ஒவ்வொரு நிமிடமும் எமது ஆற்றல் களை பரீட்சித்துப் பார்த்தவண்ணமே இருக்கிறது.
நிறைவேறும் வருடத்திற்கு விடைகொடுப்பதும் மலரும் புத்தாண்டை எதிர்பார்ப்புக்களுடன் வரவேற்பதும் இந்த அடிப்படையிலேயே நிகழ்கின்றது.
அதற்கமைய, கடந்த வருடத்தை ஒரு நாடு என்றவகையில், எமக்கு எண்ணற்ற சாதகமான பலன்களை பெற்றுத் தந்த வருடமாகவே கருதலாம். அதேபோன்றே 2018 ஆம் ஆண்டில் நாம் அடியெடு த்து வைப்பதும் நிச்சயம் வெற்றிகொள்ள வேண்டிய ஏராளமான சவால்களுடனேயே ஆகும்.
அந்தவகையில் அடைய வேண்டியிருக்கின்ற பொருளாதார சுபீட்சம், பலமாக உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டிய சமூக நல்லிணக்கம், பூரணப்படுத்தப்பட வேண்டிய மனித சுதந்திரம், இந்த மண்ணில் மென்மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டிய நம் நாட்டின் ஒளிரிடும் நற்பெயர் ஆகியன அவற்றுள் முதலிடம் வகிக்கின்றன. மலரும் புதிய வருடத்தை கோலாகலமான ஆரம்பமாக அமைத்துக்கொள்ள வேண்டுமாயின் அதனை எமது உறுதிப்பாட்டினாலும் அர்ப்பணிப் பினாலுமே சாதிக்க முடியும்.
மலரும் இந்த புத்தாண்டு, இலங்கைவாழ் மக்கள் அனைவருக்கும் சௌபாக்கியமும் ஆரோக்கியமும் கிட்டும் புத்தாண்டாக அமைய எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் ஜானாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.