வனப் பாதுகாப்புத் திணைக்களம் மறுசீரமைக்கப்படும்- மைத்திரிபால

366 0

வனப் பாதுகாப்புத் திணைக்களத்துக்குத் தேவையான வளங்களை எந்தவித குறைபாடும் இன்றி பெற்றுக் கொடுத்து அதனை முழுமையான மறுசீரமைப்புக்கு உட்படுத்த அரசாங்கம் தற்பொழுது நடவடிக்கை எடுத்துவருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதனால், மக்கள் எதிர்நோக்கியுள்ள காட்டு யானைப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

பொலன்னறுவையில் வெஹெரகல பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றுகையில் இதனைக் கூறியுள்ளார்.

வனப் பாதுகாப்புத் திணைக்களத்திடம் வளப் பற்றாக்குறை காரணமாக யானை வேலி அமைப்பதில் சிக்கல் நிலை காணப்படுகின்றது. எதிர்வரும் நாட்களில் இந்தப் பிரச்சினை தீரும் எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வனப் பாதுகாப்புத் திணைக்களத்துக்கு நாட்டிலுள்ள பௌத்த இனவாத அமைப்புக்கள் பல்வேறு  குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன. வில்பத்து வனப் பிரதேசத்தை அழித்து மக்களைக் குடியேற்றுவதாகவும் பெறுமதி வாய்ந்த மரங்களை வெட்டுவதாகவும் அவ்வமைப்புக்கள் குற்றம்சாட்டி வருகின்றன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வனப்பாதுகாப்பு திணைக்களத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் முன்னெடுத்துவரும் தீர்மானங்கள் பாராட்டத்தக்கது என வில்பத்து குடியேற்றம் தொடர்பில் மும்முரமாக செயற்பட்டுவரும் தேசிய சங்க சம்மேளனத்தின் செயலாளர் ஆனந்த சாகர தேரர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் வாழ்த்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment