ஆங்கில புத்தாண்டு: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

2164 42

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆங்கிலப் புத்தாண்டு நாளை பிறக்க உள்ள நிலையில் தமிழக மக்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- 

புத்தாண்டில் வறுமை, அறியாமை, தீவிரவாதம், வன்முறை அகன்று, மதச்சார்பற்ற நிலை தொடர்ந்து நிலைத்து, சகோதரத்துவம் தழைத்தோங்கி, வேலை வாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம் உயர்ந்து அனைவரது வாழ்விலும் வளமும், நலமும் பெருகி, மக்கள் மகிழ்வுடன் வாழ உளமாற வாழ்த்துகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:-

ஜனநாயகம் வழங்கியுள்ள வலிமையான ஆயுதமான வாக்குச் சீட்டை பணத்துக்கும், அச்சுறுத்தலுக்கும் பலியாக்கி விடாமல், வாக்குரிமையைப் பயன்படுத்தும் கடமை ஆற்றிட தமிழக வாக்காளர்கள் இப்புத்தாண்டு நாளில் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.

இருளுக்குப் பின் வெளிச்சம்; பனிக்காலத்திற்குப் பின்னர் வசந்தம் என்ற உணர்வோடு நம்பிக்கைக் கொண்டு தமிழக மக்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்புத்தாண்டில் சகோதர நேசம் மேலோங்கி நின்றிடட்டும், நம் அனைவருக்கும் புதுவாழ்வும், புத்தெழுச்சியும், புது வளர்ச்சியும் வழங்கிடும் ஆண்டாக இவ்வாண்டு அமைந்திடட்டும் என வாழ்த்தி அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது உளம்கனிந்த நல்வாழ்த்துக்களை உரித்தாக்கி கொள்கிறேன்.

த. மா. கா. தலைவர் ஜி.கே.வாசன்:-

இந்த புதிய ஆண்டு இந்தியர்களாகிய நமக் கெல்லாம் நற்பயன்களை தரும் என்ற நம்பிக்கையோடு இனிதே வரவேற்போம். மேலும் இந்திய மக்கள் அனைவரும் புத்துணர்ச்சியோடு, புதுப்பொலிவோடு வாழ நல்வழிகள் அமைய வேண்டும்.

புத்தாண்டு பிறந்து தாய்த்தமிழ் வளர்ந்து, தமிழ் மக்கள் நல்வாழ்வு வாழ்ந்து, தமிழகம் செழித்து, நாடு வளர வேண்டும் என்று கூறி தமிழ் மக்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ்:-

2018-ம் ஆண்டை ஊழல் எதிர்ப்பு ஆண்டாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் இணைந்து மக்களும் கடைபிடிக்க வேண்டும். 2017 ஏமாற்றங்களைக் கொடுத்தாலும் 2018-ஆம் ஆண்டு நன்மைகளையும், நம்பிக்கைகளையும் மட்டுமே நமக்கு வழங்கப் போகிறது.

அந்த நம்பிக்கைகளுடன் தமிழகத்தில் மாற்றம், முன்னேற்றத்தை அடைய இப்போதிலிருந்தே உழைக்க இந்த ஆங்கிலப் புத்தாண்டு நாளில் தமிழக மக்கள் அனைவரும் சபதம் ஏற்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் தனபாலன்:-

காஷ்மீர் முதல் கன்னியா குமரி வரை இந்தியா ஒரு நாடு. இதில் ஏற்ற தாழ்வு இல்லாத நிலையை விடுதலைக்கவிஞர் மகாகவி பாரதி பாடிய செப்புமொழி பதினெட்டுடையாள் எனினும் சிந்தனை ஒன்றுடையாள் என்ற பாடலை நினைவில் கொண்டு ஒற்றுமையோடு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இதற்கு புத்தாண்டு நமக்கெல்லாம் நல்வழி காட்டிட வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்:-

மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் மக்களை பிளவுபடுத்தி குறுகிய அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள முயல்வது நாட்டின் அடிப்படை கொள்கைகளுக்கும், அரசியலைப்பு சட்டத்திற்கும் புறம்பான முறையில் செயல்படுவது நம்மை பின்னோக்கி இழுக்கும் முயற்சியாகும்.

மக்கள் ஒற்றுமை காக்க அனைவருக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கை அமைந்திட அனைவரும் உறுதிபூண்டிட வேண்டுகிறோம்.

மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்:-

ஒவ்வொரு ஆண்டும் பிறக்கிற பொழுது புதிய நம்பிக்கைகளும் பிறக்கின்றன. கடந்து செல்லும் ஆண்டு பல்வேறு அனுபவங்களை விட்டுச் செல்கிறது. அனுபவங்களை அடியுரமாக்கி புதிய நம்பிக்கை பூ மலரட்டும்.

மேலும் வாழ்த்துக்கள் தெரிவித்தவர்கள் விவரம் வருமாறு:-

திராவிட கழக தலைவர் கி.வீரமணி, பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ,.சி.சண்முகம், தொழிலதிபர் வி.ஜி.சந்தோ‌ஷம்.

இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், திராவிட மக்கள் மறுமலர்ச்சி கழக தலைவர் துரை ரகுராம், கோகுலம் மக்கள் கட்சி நிறுவன தலைவர் எம்.வி.சேகர், கொங்கு நாடு மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன், தமிழ்நாடு- பாண்டிச்சேரி பார்கவுன்சில் துணைத்தலைவர் பி.எஸ்.அமல்ராஜ்.

Leave a comment