2017-ல் விளையாட்டுத்துறையில் உசைன் போல்ட் ஓய்வு, டோனி கேப்டன் பதவியில் இருந்து விலகல், விராட் கோலி – அனுஷ்கா சர்மா திருமணம் என பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன
ஜமைக்காவைச் சேர்ந்த ஓட்டப்பந்தய வீரரான உசைன் போல்ட் உலகின் அதிவேக மனிதனாக திகழ்ந்து வந்தார். ஒலிம்பிக்கில் 9 தங்கப் பதக்கங்கள் வென்று சாதனைப் படைத்தார். சக வீரர் ஒருவர் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியதால் ஒரு ஒலிம்பிக் பதக்கத்தை விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
லண்டனில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற உலக தடகளத் தொடருடன் ஓய்வு பெறுவதாக கூறினார். ஓய்வு பெறும்போது ‘‘வீழ்த்த முடியாத வீரராக விடைபெறுவேன்’’ என்று உசைன் போல்ட் கூறினார். ஆனால் துரதிருஷ்டவசமாக 100 மீ்ட்டர் ஓட்டப்பந்தயத்தில் 3-வது இடமே பிடித்தார். 4X100 ஓட்டப்பந்தயத்தில் தசைப்பிடிப்பு காரணமாக மைதானத்திலேயே விழுந்தார். இதனால் உசைன் போல்டின் முடிவு அவரது விருப்பப்படி அமையாமல் முடிந்துவிட்டது.
கர்ப்பத்துடன் விளையாடி சாம்பியன் பட்டம் வென்று அசத்திய செரீனா வில்லியம்ஸ்
அமெரிக்காவின் மசெரீனா வில்லியம்ஸ் உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீராங்கனையாக திகழ்ந்து வருகுிறார். கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றது. இதில் ஜனவரி 28-ந்தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று 7-வது முநையாக ஆஸ்திரேலிய ஓபனை வென்றார். அத்துடன் 23 கிராண்ட்ஸ்லாம் வென்று உலகளவில் 2-வது இடத்தில் உள்ளார்.
இதில் ஒரு வேடிக்கை என்னவெனில், ஆஸ்திரேலியா ஓபனில் கர்ப்பத்துடன் விளையாடினார். ஒரு பெண்மணி 3 மாத கால கர்ப்பிணியாக இருக்கும்போது ஓடுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஆனால் செரீனா தனது மனவிலிமையோடு விளையாடி சாதனைப் படைத்தார். அத்துடன் செப்டம்பர் 1-ம்தேதி அழகான பெண்குழந்தை பெற்றுக் கொண்டார்.
விராட் கோலி – அனுஷ்கா திருமணம்
இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
இதனால் இலங்கை தொடரில் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலி, கடந்த 11-ந்தேதி அனுஷ்கா சர்மாவை இத்தாலியில் உள்ள சொகுசு விடுதியில் வைத்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் கடந்த 21-ந்தேதி டெல்லியிலும், 26-ந்தேதி மும்பையிலும் வரவேற்பு நடைபெற்றது.
டிரான்ஸ்பர் பீஸ்: கால்பந்து வரலாற்றை திருப்பிப் போட்டார் நெய்மர்
பார்சிலோனா அணிக்காக கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து விளையாடி வந்தவர் பிரேசில் நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரர் நெய்மர். இந்த வருடம் பிரான்ஸ் நாட்டின் முன்னணி கால்பந்து கிளப் அணியான பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் நெய்மரை ஒப்பந்தம் செய்தது.
இதற்காக பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணி டிரான்ஸ்பர் பீஸாக பார்சிலோனாவிற்கு 222 மில்லியன் யூரோ (சுமார் 1665 கோடி ரூபாய்) கொடுத்தது. பி.எஸ்.ஜி. அணியுடன் ஐந்து வருடத்திற்கான ஒப்பந்தம் ஆகஸ்ட் மாதம் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தானது. ஒரு வீரர் இவ்வளவுத் தொகைக்கு அடுத்த கிளப்பிற்குச் செல்வது கால்பந்து வரலாற்றிலேயே இதுதான் முதன்முறையாகும்.
இந்தியா பெருமிதம்: உலகக்கோப்பை கால்பந்து போட்டியை முதன்முறையாக நடத்தியது
17 வயதிற்கு உட்பட்டோருக்காக பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரை முதன்முறையாக இந்தியா கடந்த அக்டோபர் 6-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை நடத்தி பெருமை சேர்த்தது.
இந்த தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடரின் மொத்த ஆட்டங்களையும் சுமா்ர 13 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் நேரில் வந்து கண்டுகளித்தனர்.
முதன்முறையாக சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வீழ்த்தி பாகிஸ்தான் சாதனை
ஐசிசி-யின் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் ஜூன் 1-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடைபெற்றது. முதல் லீக்கில் இந்தியாவிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான், அதன்பின் தொடர்ச்சியாக வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றி சாதனைப் படைத்தது.
விரைவாக 300 விக்கெட்டுக்கள் வீழ்த்தி டென்னிஸ் லில்லி சாதனையை முறியடித்தார் அஸ்வின்
இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்பவர் அஸ்வின். இலங்கைக்கு எதிராக நாக்பூரில் நடைபெற்ற டெஸ்டின் 2-வது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தியபோது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 300 ரன்களை தொட்டார்.
இந்த மைல்கல்லை எட்ட அவருக்கு 54 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே தேவைப்பட்டது. இதன்மூலம் 56 டெஸ்டில் 300 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனைப்படைத்திருந்த டென்னிஸ் லில்லி பின்னுக்கு தள்ளியுள்ளார்.
ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார் டோனி
இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்து வந்தவர் மகேந்திர சிங் டோனி. இவரது தலைமையில் இந்திய அணி ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை வென்று சாதனைப் படைத்தது.
36 வயதாகும் டோனி மீது பல்வேறு விமர்சனங்கள் எழும்பியது. இதனால் கடந்த ஜனவரி மாதம் 4-ந்தேதி ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் பதவியில் இருந்து டோனி விலகினார்.
ஒருநாள் போட்டியில் மூன்று இரட்டை சதங்கள்: ரோகித் சர்மா சாதனை
டிசம்பர் 13-ந்தேதி மொகாலியில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 208 ரன்கள் குவித்தார்.
இதன்மூலம் ஒருநாள் போட்டியில் மூன்று இரட்டை சதங்கள் விளாசி சாதனைப் படைத்துள்ளார். மேலும், டி20 போட்டியிலா் 35 பந்தில் சதம் அடித்து உலக சாதனையை சமன் செய்தார்.