காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 7-ந்தேதியும், மாவட்ட தலைவர்கள் கூட்டம் 10-ந்தேதியும் நடக்கிறது என்று திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் சென்னை சத்திய மூர்த்திபவனில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சட்டமன்றம் 8-ந்தேதி கூடுவதால், அதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து சென்னை சத்திய மூர்த்திபவனில் வருகிற 7-ந்தேதி மாலை 6 மணியளவில் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழக காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டம் 10-ந்தேதி காலை 11 மணியளவில் நடக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் என்னுடைய 30 ஆண்டு கால நண்பர். அவருடைய அரசியல் அறிவிப்பை நான் மனதார வரவேற்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு திருநாவுக்கரசர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- ஆன்மிக அரசியல் என்று சொல்லி இருப்பதால், நடிகர் ரஜினிகாந்த் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பார் என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறி உள்ளாரே?
பதில்:- சாதி, மதம் கடந்த அரசியல் என்றும் ரஜினிகாந்த் கூறி இருக்கிறார். சாதி, மதம் கடந்த கட்சி காங்கிரஸ். எனவே காங்கிரஸ் கட்சியுடன் ரஜினிகாந்த் கூட்டணி வைப்பார் என்று எடுத்துக்கொள்ளலாமே! ஆனால் இதற்கு காலம் தான் பதில் சொல்லும்.
கேள்வி:- திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ரஜினிகாந்த் இருப்பாரா?
பதில்:- நான் அரசியல்வாதி, ஜோசியவாதி கிடையாது. தி.மு.க., காங்கிரஸ் கட்சி கூட்டணி திடமாக, உறுதியாக நேற்று, இன்று, நாளையும் தொடரும். பா.ஜ.க. பின்புலமா?
கேள்வி:- ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க பா.ஜ.க., ஆடிட்டர் குருமூர்த்தி பின்புலமா?
பதில்:- ரஜினிகாந்த் சுயமாக சிந்தித்து முடிவு எடுக்க கூடியவர். எனவே அவரது பின்புலமாக பா.ஜ.க., ஆடிட்டர் குருமூர்த்தி இருப்பதாக நான் கருதவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மூத்த தலைவர் குமரிஅனந்தன், செய்தி தொடர்பாளர் கோபண்ணா, முன்னாள் எம்.பி., விஸ்வநாதன் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.