புத்தாண்டை கொண்டாடும் விதமாக, இந்தோனேசியா நாட்டில் 450-க்கு மேற்பட்ட ஜோடியினர் நேற்று ஒரே நாளில் திருமணம் செய்து கொண்டனர்.
ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என புத்தாண்டு கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் களை கட்டியது. பொதுமக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களைச் சொல்லி தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். பல்வேறு வாண வேடிக்கைகள் கண்களை கவரும் விதமாக அமைந்திருந்தது.
இந்நிலையில், இந்தோனேசியா நாட்டின் தலைநகர் ஜகார்த்தாவில் நேற்று நள்ளிரவில் 450-க்கு மேற்பட்டோர் பங்கேற்ற மெகா திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட ஜோடியினருக்கு ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைக்கப்பட்டு, அதற்கான சான்றிதழ்களை அரசு அதிகாரிகளால் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திருமணம் செய்தவர்கள் கூறுகையில், எங்கள் திருமணத்தை எளிதில் மறக்க முடியாத விதமாக நடத்த முடிவு செய்தோம். அதற்காகவே அரசு ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று திருமணம் செய்து கொண்டோம் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
இந்த மெகா நிகழ்ச்சியில் திருமண ஜோடியின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.