மோட்டார் வாகனம் ஒன்றை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு தனியார் நிறுவன அதிகாரி போல் நடித்து பணம் பிடுங்க முயன்ற ஒருவரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் நேற்று (30) கைது செய்தனர்
கண்டியில், தனியார் நிறுவனம் ஒன்றில் இருந்து வாடகைக்கு மோட்டார் வாகனம் ஒன்றை பெற்றுள்ள மேற்படி சந்தேக நபர் கண்டி ஹுலுகங்கை பிரதேசத்திற்குச் சென்றுள்ளார்.
அங்கு, தான் கண்டியின் பிரபல நிதி நிறுவனப் பிரதிநிதி என்றும் தாம் குறைந்த விலையில் முச்சக்கர வண்டிகளை பெற்றுத் தருவதாகவும் கூறியுள்ளார். இதன் அடிப்படையில் ஒரு இலட்சம் ரூபாய் வீதம் செலுத்தி முச்சக்கர வண்டிகளை பெற்றுக்கொள்ள இருவர் முன்வந்துள்ளனர்.
மறு நாள் அவ்விருவரையும் பணத்துடன் தனது வாடகை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு கண்டியிலுள்ள நிதி நிறுவனத்துக்குச் சென்றுள்ளார். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு முச்சக்கர வண்டிகளைக் காண்பித்து அவற்றைக் கொள்வனவு செய்வதுபோல் நடித்துள்ளார்.
பின்னர் இருவரையும் நகரத்திற்கு அழைத்துச் சென்று மிகவும் சூட்சுமமான முறையில் அவர்களிடம் இருந்த பணத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களை இடைவழியில் வாகனத்தில் இருந்து இறக்கிவிட்டுச் சென்றுள்ளார்.
தாம் ஏமாற்றப்பட்டிருப்பதை தாமதமாக உணர்ந்த அவ்விருவரும் பொலிஸில் முறைப்பாடு செய்தனர். அதன் பேரில் பொலிஸார் நடத்திய விசாரணையின் பெறுபேறாக, கொழும்புக்குத் தப்பிச் சென்றிருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
இதேபோல் மேலும் பலரிடம் இவர் மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.