அமெரிக்காவில் வாகன பழுது நீக்கும் மையத்தில் 2 பேர் சுட்டுக்கொலை

516 0

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வாகன பழுது நீக்கும் மையத்தில் தொழிலாளர்கள் 2 பேர் சுட்டுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் வாகன பழுது நீக்கும் மையம் ஒன்றில் 2 பேர் தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர். நேற்று முன்தினம் இந்த மையத்துக்குள் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்தார். திடீரென அவர், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அவர்கள் இருவரையும் கண்மூடித்தனமாக சுட்டார். பின்பு அங்கிருந்து அவர் தப்பிச் சென்றார்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஹூஸ்டன் நகர போலீசார் சுட்டுக் கொல்லப்பட்ட இரு தொழிலாளர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் துப்பாக்கி சூடு நடத்தியவரை போலீசார் தேடியபோது அங்குள்ள முற்றத்தில் ஒருவர் பிணமாக கிடப்பது தெரிய வந்தது. 2 தொழிலாளர்களையும் சுட்டுக் கொன்றவர் அவர்தான் என்பதும், பிறகு தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பதும் தெரிய வந்தது. தொழிலாளர்களை சுட்டவர் முன்பு அதே, வாகன பழுது நீக்கும் மையத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்தவர் ஆவார்.

பலியான மூவர் பற்றிய பெயர் விவரங்களை போலீசார் உடனடியாக வெளியிடவில்லை. முன்விரோதத்தில் இந்த படுகொலைகள் நடந்திருக்கலாம் என்று ஹூஸ்டன் நகர போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Leave a comment