பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் பாகிஸ்தான் மெத்தனமாக செயல்படுவதால் அந்நாட்டுக்கு வழங்க திட்டமிட்டு இருந்த நிதியை நிறுத்தி வைக்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தீவிரமாக பரிசீலித்து வருகிறார்.
பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் பாகிஸ்தான் மெத்தனமாக செயல்படுவதால் அந்நாட்டுக்கு வழங்க திட்டமிட்டு இருந்த ரூ.1,657 கோடி நிதியை நிரந்தரமாக நிறுத்தி வைக்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தீவிரமாக பரிசீலித்து வருகிறார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டிடங்களை 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ந்தேதி அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானத்தை மோதச் செய்து தகர்த்தனர். இந்த தாக்குதலில் 3 ஆயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு அமெரிக்க அரசாங்கம் தீவிர முனைப்பு காட்டி வருகிறது. பயங்கரவாதத்தை ஒடுக்க பல்வேறு நாடுகளுக்கு நிதி உதவியும் அளித்து வருகிறது. இந்த உதவித் தொகையை பெறும் முக்கிய நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்றாகும்.
2002-ம் ஆண்டு முதல் பயங்கரவாத்துக்கு எதிராக பாகிஸ்தான் போராடுவதாக கூறி அமெரிக்கா நிதி உதவி வழங்கி வருகிறது. இதுவரை சுமார் 33 பில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ.2 லட்சம் கோடி) இதுபோல் பாகிஸ்தான் பெற்றுள்ளது.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தனது நாட்டில் செயல்படும் பயங்கரவாத குழுக்களை ஒடுக்க முடியாமல் பாகிஸ்தான் திணறி வருகிறது. மேலும் தனது அண்டை நாடுகளான இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆகியவற்றில் தாக்குதல் நடத்தும் பயங்கரவாத குழுக்களுக்கு பாகிஸ்தான் வெளிப்படையாகவே உதவி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து பயங்கரவாத செயல்களை தடுக்கும் நோக்குடன் பாகிஸ்தானுக்கு அளித்து வரும் நிதி உதவியை நிரந்தரமாக நிறுத்தலாமா? என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் யோசித்து வருகிறார்.
இந்த வகையில் 4 மாதங்களுக்கு முன்பு 255 மில்லியன் அமெரிக்கா டாலர்களை (ரூ.1,657 கோடி) பாகிஸ்தானுக்கு வழங்கவேண்டிய நிதியை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இந்த நிலையில், இந்த தொகை பாகிஸ்தானுக்கு வழங்குவதில் டிரம்புக்கு இஷ்டம் இல்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுபற்றி அமெரிக்காவின் பிரபல நாளிதழான நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள பரபரப்பான தகவல்கள் வருமாறு:-
அமெரிக்கா-பாகிஸ்தான் இடையேயான நட்புறவு நீண்டகாலத்துக்கு முக்கியமானது. ஆனால் டிரம்ப் ஜனாதிபதியாக பதவி ஏற்றது பிறகு பாகிஸ்தான் மீதான கண்ணோட்டம் மாறி வருகிறது.
பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத குழுக்களின் புகலிடமாக பாகிஸ்தான் திகழ்கிறது. இதனால் வன்முறையும், பயங்கரவாதமும் அங்கு அதிகரித்து உள்ளது என்று டிரம்ப் வெளிப்படையாகவே குற்றம்சாட்டினார். அதன் பிறகும் பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் குறைந்தபாடில்லை. அங்கு இயங்கும் பயங்கரவாத குழுக்களை பாகிஸ்தான் அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதன் காரணமாக டிரம்ப் நிர்வாகம் அதிருப்தி அடைந்துள்ளது.
அதுவும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாகிஸ்தானில் கனடிய-அமெரிக்க குடும்பத்தினரை பயங்கரவாதிகள் விடுவித்த சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதி ஒருவன் பற்றி அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் எந்த தகவலும் அளிக்க மறுத்துவிட்டது. இதனால் டிரம்ப் நிர்வாகம் கடுமையான ஆத்திரத்தில் உள்ளது.
எனவே கடந்த ஆகஸ்டு மாதம், வழக்கமாக பாகிஸ்தானுக்கு வழங்கவேண்டிய 255 மில்லியன் டாலர் நிதியை வழங்காமல் அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
தற்போது அதை நிரந்தரமாக நிறுத்தி வைக்கலாமா? என்று டிரம்ப் ஆலோசித்து வருகிறார். இதுபற்றி எதிர்வரும் வாரங்களில் டிரம்ப் முடிவு செய்வார்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதுபற்றி பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் அசிப் கபூர் கூறுகையில், பயங்கரவாதிகள், பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறுவது தவறானது என்று மறுத்தார்.
பயங்கரவாதத்தை தடுப்பதற்கான நிதி உதவியை அமெரிக்கா அளிக்கவில்லை என்றால் பாகிஸ்தான் பாடு திண்டாட்டமாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.