நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் மற்றும் தனிக்கட்சி அறிவிப்பு தொடர்பாக பல்வேறு தலைவர்கள் தங்கள் கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
அரசியல் பிரவேசத்தை உறுதி செய்த நடிகர் ரஜினிகாந்த், தனிக்கட்சி தொடங்கி வரும் சட்டமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாகவும் அறிவித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பல்வேறு தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்கள் கருத்துக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
துணிச்சலுடன் அரசியல் களத்திற்கு வருகிறேன் என்று ரஜினி காந்த் அறிவித்திருப்பதாக பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறி உள்ளார்.
ஆர்.கே.நகர் போன்ற தேர்தலை பார்த்தபின் ஊழலை எதிர்த்து போராட பல கரங்கள் தேவை என்றும், வரும் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை ரஜினி ஆதரிப்பார் என்றும் நம்புவதாகவும் தமிழிசை கூறியுள்ளார்.
ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவித்த பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி, தமிழக மக்கள் புத்திசாலிகள் என்றும், ரஜினிக்கு அரசியல் குறித்து எந்த தெளிவும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
ரஜினியின் அறிவிப்பு ஆனந்த அதிர்ச்சி அளிக்கிறது, இனி அவர் பின் வாங்க கூடாது என நடிகர் விவேக் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் குறித்து பேசாததால் ரஜினி மறைமுகமாக பா.ஜ.க.விற்கு ஆதரவளிப்பதாக தோன்றுகிறது என சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
ரஜினியின் அரசியல் அறிவிப்பை வரவேற்கிறேன், அவர் முதலில் மக்களை சந்திக்கட்டும் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார்.