கிழக்கில் கதிரவன் தன் பொற் கரங்களை நீட்டி 2017 ஆம் ஆண்டை வரவேற்றான்.வடக்கு கிழக்கு இணைந்த நிலப்பரப்பே தமிழர் தாயகம். அந்த கிழக்கில் கதிரவனுக்கு நன்றி செலுத்தும் தை திங்களில் ”எழுக தமிழ்” எழுந்து நின்றது. அதற்காகன ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அதே வேளை வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள கேப்பாப்பிலவு, பிலக் குடியிருப்பில் சிறிலங்கா விமானப்படையின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்கள் போராட்டம் ஆரம்பமானது. அது
இன்று வரை தொடர்கின்றது….
மாசிமாதம் “எழுக தமிழ்” வடக்கு – கிழக்கு இணைந்த தமிழர் தேசம் , தமிழ் பேசும் மக்களின் தனித்துவம் , இறைமை , சுய நிர்ணய உரிமை ஆகியவற்றின் அடிப்படையில் சமஸ்ரி முறையிலான கூட்டாட்சி ” என்ற கோரிக்கை தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசையாக முன் வைத்து மட்டக்களப்பு நகருக்கு அருகில் மாபெரும் பேரணியாய் “எழுக தமிழ்” பொங்கு தமிழாய் பொங்கியது.
தொடர்ந்து அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி வவுனியா , கிளிநொச்சி ,யாழ்ப்பாணம் என மாவட்டங்கள் தோறும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் தொடந்த வண்ணம் உள்ளன…..
முள்ளிவாய்க்கால் நினைவு நாள் என்பது ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இறந்தவர்களை நினைவு கூரும் நாள் ஆகும். மே 18 இல் முள்ளிவாய்கால் மண்ணில் இறந்தவர்களை நினைவுகூறும் நாளில் அரசியல்வாதிகள் அதனை அரசியல் பிரச்சார மேடையாக பயன்படுத்தினர். அவ்விடத்தில் சம்மந்தரின் வெள்ளை சாயத்தை கழுவிவிட்டனர் அம் மக்கள். ஆத்மாக்களின் இடத்தில் அரசியல் இலாபத்தினை தேட முயன்றவர்களை மக்கள் அடையாளம் கண்டதுடன் விழிபடையவும் செய்தனர்.
அதன் விளைவாக கார்திகை மாதம் கல்லறை வீரர்களுக்கு வணக்கம் செலுத்த துயிலும் இல்லங்கள் தோறும் அரசியல் கலப்பில்லாது துணிந்து நின்று மக்கள் மாவீரர் நாளை உரிய முறையில் கடைப்பிடித்தனர்.
வருட இறுதியில் உள்ளுராட்சி தேர்தலுக்காய் அரசியல் கட்சிகள் கூட்டுசேர்ந்தனர், பிரிந்தனர், வெளியேறினர் நாடாளுமன்ற கதிரைக்கான கனவுகள் கலைந்து மாநகரசபை கதவாவது சாயக்கிடைக்காதா என அரசியல்வாதிகள் அங்கலாய்த்து பறக்கின்றனர் . உள்ளுராட்சி தேர்தல் பிரச்சாரங்களோடு 2018 இன் வாசல் திறக்கப்படவுள்ளது.
2017 மக்கள் புரட்சி ஆண்டாக மிளிந்தது. இந்த புரட்சி 2018 ஆம் ஆண்டை எழுச்சியாக்கும் என்ற நம்பிக்கையுடன் தமிழ் மக்கள் காத்திருக்கிறார்கள்.