c c cdddகடந்த கால மஹிந்தவின் ஆட்சியில் இடம்பெற்றதைப் போன்றே நல்லாட்சியிலும் அமைச்சர்களின் உறவினர்கள் வெளிநாட்டு தூதுவர்களாக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய பிரதமரின் உறவினரும், பிரபல தொழில் அதிபருமான அமெரியா விஜயவர்தன இங்கிலாந்திற்காக இலங்கை உயர்ஸ்தானிகராகவும்,அமைச்சர் டிலான் பெரேராவின் நெருங்கிய உறவினரான சரோஜா சிறிசேன ஜேர்மனிக்காக தூதுவராகவும்,ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உறவினரான காமினி விஜயவர்தன ஜேர்மன் தூதுவராலயத்தின் அதிகாரியாகவும் நியமிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நியமனங்களால் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அதிகாரிகள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரை ஜப்பான்,அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், சீனா, பிரான்ஸ், இத்தாலி, போலன்ந்து, தென் ஆபிரிக்கா, பாகிஸ்தான், ரஸ்யா, கட்டார்,சவுதி அரேபியா, அமெரிக்கா, கென்யா, எகிப்து, மலேசியா, மாலைத்தீவு உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளின் தூதுவர்களாக பதவி வகிப்பவர்கள் அரசியல்வாதிகளின் தலையீட்டினால் நியமனங்கள் பெற்றவர்கள் என்பதால் கடந்த மஹிந்த ஆட்சிக்கும், நல்லாட்சிக்கும் இடையில் எவ்வித வித்தியாசமும் இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை அதிகாரிகளின் பற்றாக்குறையினால் இவ்வாறான வெளியாட்கள் நியமனங்கள் இடம்பெறுவதாகவும், தூதுவர்களாக நியமிக்கபட்டவர்களுள் பெரும்பாலானார் அதற்கான எவ்வித தகுதிகளும் இல்லாதவர்கள் என்று வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மஹேசினி கொலொன்னே தெரிவித்துள்ளார்.
மேலும் ஓய்வுப் பெற்ற இராணுவ அதிகாரிகள், நிர்வாக சேவை அதிகாரிகள், தேயிலை வர்த்தகர்கள் என 28 நபர்கள் குறித்த பதவிகளுக்காக அரசியல் பரிந்துரைகளுடன் பெயர் பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் மிக விரைவில் இவர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.