1978 ஆம் ஆண்டு இலங்கையின் வடக்கிலுள்ள கிராமம் ஒன்றில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து யாழ் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகி பொருளியலில் சிறப்புப் பட்டம் பெற்ற பகீரதன் அடக்கு முறைக்குள்ளாகி மக்கள் துன்பப்படுவதைப் பார்த்துத் தனது பல்கலைக்கழக வாழ்வில் பல போராட்டங்களில் பங்கெடுத்து மாணவர் தலைவராகி அடக்குமுறைக்கெதிராகக் குரல் கொடுத்து வந்தார். இதனால் தொடர்ச்சியான அச்சுறுத்தலை இவர் எதிர்கொண்டு வந்தார்.
பட்டப்படிப்பின் பின்னர் தனது பல்கலைக்கழகத் தோழியினைக் காதல் திருமணம் செய்து கொண்ட இவர் மன்னாரில் ஆசிரியராகக் கடமையாற்றினார். மன்னாரில் ஆசிரியராகக் கடமையாற்றும் போது வெள்ளை வானால் கடத்தப்பட்டு சித்திரவதைக்குள்ளாகிய நிலையில் கொல்லப்பட இருந்த சூழலில் மறைமாவட்ட ஆயரால் காப்பாற்றப்பட்டு அங்கிருந்து கொழும்பிற்கு மறைவாக அனுப்பி வைக்கப்பட்டார்.
கொழும்பில் தங்கியிருந்த காலத்தில் புறநகர்ப் பகுதி ஒன்றில் நடந்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட இவர் இலங்கை அரச படைகளால் துன்புறுத்தலுக்காளானார். பின்னர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட இவர், தொடர்ந்தும் அங்கிருப்பதால் பாதுகாப்பில்லை என்பதால் தமிழ்நாட்டுக்குக் குடும்பத்துடன் தப்பிச் சென்றார். விசா 3 மாதத்துடன் காலாவதியாக தான் மீண்டும் நாடு கடத்தப்படலாம் என்ற அச்சத்திலிருந்த அவர் படகு மூலம் உயிரைக் காப்பாற்ற அவுஸ்திரேலியாவுக்குத் தப்பிச் சென்றார். 20 நாள் கடற் பயணத்தின் பின்னர் அவுஸ்திரேலியாவை அண்மித்த நிலையில் படகு உடைந்து நீரில் தாழ, 22 மணித்தியாளம் கடல் நீரில் தத்தளித்த பின்பு அரசியல் தஞ்சம் கோரிய இவர் தடுப்பில் வைக்கப்பட்டார்.
அரசியல் தஞ்சம் கோரித் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஒருவருடன் பேனா நண்பனாக விரும்பிய கோர்க் என்ற பெண்மணிக்கு இவரின் தொடர்பு கிடைத்தது. அவரும் இவரை தன்னை அம்மா என அழைக்கும் படி கேட்டு அன்பு செலுத்துகிறார்.
2 ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட பின்பு இவரின் அகதிக் கோரிக்கை ஏற்கப்பட்டு 2011 இல் விடுதலையானார். அன்றிலிருந்து தமிழ்நாட்டிலிருக்கும் தனது குடும்பத்தை வரவழைத்து மீளிணைய முயன்று வந்தார். நவுரு குடிவரவு தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களுக்கான கலாச்சார ஆலோசகராக வேலை கிடைக்கும் வரை கிடைக்கும் இடங்களில் துப்பரவுப் பணி செய்து வந்தார். மிக விரைவில் குடும்பத்துடன் இணையும் நம்பிக்கையில் நாட்களை எண்ணிய இவரின் குடும்பத்தை அழைப்பதற்கான விணப்பப் படிவங்கள் இவர் படகில் வந்தவர் என்ற ஒரே காரணத்தினால் நிராகரிக்கப்பட்டே வந்தது. 7 1/2 ஆண்டுகளுக்கு மேலாகத் தனது குடும்பத்தைப் பிரிந்திருந்த இவர் கடந்த நவம்பரில் குடும்பத்துடன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.