இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 69 பேரை விடுவிக்குமாறு யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் நீதிமன்றங்கள் இன்று உத்தரவிட்டுள்ளன.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கை கடற்படையினரால் குறித்த இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர்களை விடுவிக்க யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன.
இந்த நிலையில் அவர்கள் 69 பேரையும் தாய் நாட்டுக்கு திருப்பியனுப்ப யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரகம் நடவடிக்கைகள் எடுத்துவருகிறதென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்ட 20 மீனவர்கள் உட்பட 2017ஆம் ஆண்டில் மாத்திரம் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழகம் மற்றும் புதுச்சேரியின் 89 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்னும் 71 மீனவர்கள் விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுவிக்கப்படவுள்ள 69 இந்திய மீனவர்களில் 52 பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததுடன், ஏனைய 17 பேரும் மன்னார் சிறையில் தடுத்து வைக்கப்பட்டவர்களாவர்.
இவர்கள் யாழிலுள்ள இந்திய தூதரகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு தனியார் விடுதியொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், விரைவில் நாடு திரும்புவதற்கான நடவடிக்கைகளை இந்திய தூதரகம் முன்னெடுத்து வருகின்றது