ஜெருசலேம் நகரில் டிரம்ப் பெயரில் ரெயில் நிலையம் அமைக்க இஸ்ரேல் மந்திரி விருப்பம்

318 0

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த டிரம்ப்புக்கு நன்றி கடனாக, அந்நகரில் அமைய உள்ள சுரங்க ரெயில் நிலையத்திற்கு அவருடைய பெயரை வைக்க இஸ்ரேல் மந்திரி விருப்பம் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த மாதம் அறிவிப்பை வெளியிட்டார். மேலும், தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றவும் அவர் உத்தரவிட்டார். டிரம்ப் முடிவுக்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தன. பாலஸ்தீனத்தில் இது பெரும் கொந்தளிப்பான நிலையை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து, அமெரிக்காவின் இந்த முடிவை திரும்பப்பெறக்கோரி சில தினங்களுக்கு முன்னர் ஐ.நா பொதுச்சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதனை ஆதரித்து வாக்களிக்கும் நாடுகளுக்கு நிதியுதவிகள் நிறுத்தப்படும் என்று டிரம்ப் வெளிப்படையாகவே மிரட்டல் விடுத்தார்.

இருப்பினும், 128 நாடுகள் இந்த தீர்மானத்தை ஆதரித்தன. 9 நாடுகள் மட்டுமே எதிர்த்து வாக்களித்தது. இதனால், அமெரிக்காவின் முடிவுக்கு முட்டுக்கட்டை விழுந்தது. இருப்பினும், ஐ.நா.வின் தீர்மானத்தை ஏற்க முடியாது என அமெரிக்கா, இஸ்ரேல் அறிவித்துள்ளன.

இந்நிலையில், டெல் அவிவ் நகரில் இருந்து மேற்குக்கரை பகுதியில் உள்ள ஜெருசலேமுக்கு புதிதாக சுரங்க ரெயில் பாதை அமைப்பதற்கான திட்ட அறிக்கையை போக்குவரத்து மந்திரி கட்ஸ், அரசிடம் சமர்பித்துள்ளார். ஜெருசலேம் நகரில் உள்ள யூதர்களின் புனித இடமான மேற்குச் சுவரின் அடியில் மற்றும் பழமை நகரம் பகுதியில் ரெயில் நிலையங்கள் அமைய உள்ளன.

பழமை நகரத்தின் அடியில் அமைய உள்ள ரெயில் நிலையத்திற்கு டொனால்ட் ட்ரம்ப் பெயரை வைக்க விருப்பப்படுவதாக மந்திரி கூறியுள்ளார். ஜெருசலேமை தலைநகராக அங்கீகரித்துள்ளதற்கு நன்றி கடனாக இது இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் மிக முக்கியமான திட்டமான இதன் கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு முடிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், ஜெருசலேமானது மிக பழமையான நகரம் என்று யுனெஸ்கோவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், சுரங்க ரெயில் பாதை அமைக்கும் பணிக்கு முன் அனுமதி பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a comment