கட்சியில் இல்லாத அழகிரி மு.க.ஸ்டாலினை விமர்சிப்பதா?: ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன் கண்டனம்

305 0

மு.க.ஸ்டாலின் செயல் தலைவராக தொடரும் வரை எந்த தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெறாது என்று மு.க.அழகிரி கூறியதற்கு தி.மு.க. எம்.எல்.ஏக்கள் ஜெ.அன்பழகன் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் கூறியதாவது:-

மு.க.அழகிரி தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்டவர். அவர் சொல்வதை பெரிதுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை. மு.க.ஸ்டாலின் மீது பொறாமையில் 4,5 வருடமாக இப்படி பேசுகிறார். அவர் பேசுவது இப்போது புதிதல்ல.

ஆர்.கே.நகரில் தோல்வி அடைந்தோம். அதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் இதை ஊடகங்கள் தான் பெரிதுபடுத்துகிறது. இப்போது அழகிரி பேசும் கருத்து தி.மு.க.வில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. இப்போது எந்த கருத்து சொல்லும் தகுதியும் அவருக்கு இல்லை.

அழகிரியின் கருத்து எங்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. எங்கள் பயணத்துக்கு எந்த தடையும் இல்லை.

கேள்வி:- ஸ்டாலின் செயல் தலைவராக இருக்கும் வரை இனிவரும் தேர்தல்களிலும் தி.மு.க. வெற்றி பெறாது என்று அவர் கூறி இருக்கிறாரே?

பதில்:- மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சி கட்டுக்கோப்பாக உள்ளது. எங்களுக்குள் நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம். எங்கள் பயணத்துக்கு எந்த தடையும் இல்லை. 65 மாவட்ட கழக செயலாளர்கள் மெஜாரிட்டியுடன் 100 சதவீத பொதுக்குழு உறுப்பினர்களின் ஓட்டுமொத்த ஆதரவோடு தளபதி மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார்.

எனவே தலைமை பற்றி பேச அவருக்கு எந்த தகுதியும் இல்லை. அவர் வெளியில் இருந்து கல் எறிகிறார்.

ஆர்.கே.நகரில் தினகரன் 20 ரூபாய் டோக்கன் கொடுத்து ஓட்டு கேட்டதால் இப்போதும் 20 ரூபாய் நோட்டை வைத்து கொண்டு மக்கள் அலைவதை பார்க்க முடிகிறது.

ஆளும் கட்சி ஓட்டுக்கு 6 ஆயிரம் கொடுத்ததை அனைத்து மக்களும் அறிவார்கள். தி.மு.க. ஓட்டுக்கு பணம் கொடுக்கவில்லை. எனவே இதை ஒரு தேர்தலாக எடுத்துக் கொண்டு பேசுவது எனக்கு வித்தியாசமாக உள்ளது.

இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சி வெற்றி பெறுவது வழக்கமாக இருக்கும். ஆனால் இந்த இடைத்தேர்தல் அதைவிட மோசமாக இருந்தது. இதில் எங்கள் தோல்வியை ஏற்றுக்கொள்கிறோம். இப்போது நாங்கள் அடுத்த கட்டத்துக்கு போவது பற்றி பரிசீலிப்போம்.

மு.க.அழகிரி தென்மண்டல அமைப்பு செயலராக இருந்தபோது தேர்தலில் தி.மு.க. தோல்வியை சந்தித்துள்ளது. அப்போது சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தி.மு.க. டெபாசிட் இழந்துள்ளது. எனவே எந்த கருத்தையும் வெளியில் இருந்து சொல்வது எளிதானது.

எங்களைப் பொறுத்த வரை தி.மு.க.வையும், அதன் தலைமையையும் யார் களங்கப்படுத்துவதாக இருந்தாலும் அதை ஏற்க முடியாது. ஆர்.கே.நகர் தேர்தலில் பணம் கொடுக்காமல் களம் இறங்கிய தி.மு.க.வை பலர் பாராட்டி உள்ளனர்.இந்த தேர்தலில் சரிவை சந்தித்தாலும் அடுத்தகட்டம் நோக்கி நகர்ந்து செல்கிறோம்.

தமிழகத்தில் ஒட்டுமொத்த அரசியல் மாற்றத்தை கொண்டு வரக்கூடிய சரியான தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தான் என்பதில் அனைவரும் தெளிவாக உள்ளோம். மு.க.அழகிரி எங்களுக்குள் கலகமூட்ட பார்க்கிறார். அது நடக்காது.

நாங்கள் சிறுபிள்ளைகள் அல்ல. தலைவர் கலைஞரால் வளர்க்கப்பட்டவர்கள். தலைவர் கருணாநிதியால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் அழகிரி. அவர் பேசுவது கட்சியில் எடுபடாது.
இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

மு.க.அழகிரி இப்போது தி.மு.க.வில் இல்லை. மு.க.ஸ்டாலினை பற்றி பேசுவது வருத்தமாக உள்ளது. அவரது பேச்சு கண்டனத்துக்குறியது.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் 1 கோடி தி.மு.க. தொண்டர்களால் பொதுக்குழுவில் ஏற்றுக் கொள்ளப்பட்டவர். அவரது உழைப்பு கட்சியில் உள்ள அனைவருக்கும் தெரியும். நமக்கு நாமே திட்டத்தை ஆரம்பித்து ஊர் ஊராக நடந்து சென்று அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்தவர். கூட்டணி கட்சியையும் சேர்த்து 98 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுத் தந்ததில் அவரது பங்குதான் முக்கியம்.

இடைத்தேர்தல் முடிவை வைத்து நாம் எதையும் கணிக்க முடியாது. ஆளும் கட்சி ஓட்டுக்கு 6 ஆயிரம் கொடுக்கிறது. தினகரன் அணியினர் 10 ஆயிரம் என்றனர். இதற்காக 20 ரூபாய் டோக்கனும் கொடுத்ததை நாடறியும்.

ஆனால் தி.மு.க. ஓட்டுக்கு பணம் கொடுக்கவில்லை. ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் மு.க.ஸ்டாலின். ஆர்.கே.நகரில் ஒவ்வொரு கட்சித் தொண்டனும், நிர்வாகிகளும் எப்படி வேலை பார்த்தார்கள் என்பது மு.க.ஸ்டாலினுக்கு தெரியும்.

அவரும் தொகுதியில் கடுமையாகத்தான் பிரசாரம் செய்தார். பேனர் வைக்கும் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி. அரசியல் தலைவர்களின் காலில் விழும் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தவரும் மு.க.ஸ்டாலின்தான்.

இப்போது ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாசாரத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

பொன்னாடை அணிவிப்பதற்கு பதில் புத்தகங்களை பெற்று அதை நூலகங்களுக்கு வழங்கிவருபவர் மு.க.ஸ்டாலின். தமிழ் நாட்டில் புது கலாசாரத்துக்கு வித்திட்டு வரும் மு.க.ஸ்டாலினை பலதரப்பட்ட மக்களும் வரவேற்கிறார்கள்.

ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாசாரம் 1962-ல் உருவானது. அப்போது காஞ்சீபுரத்தில் பேரறிஞர் அண்ணாவை எதிர்த்து போட்டியிட்ட நடேச முதலியார் ஓட்டுக்கு 5 ரூபாய் பணம் கொடுத்து பெருமாள் படத்தை வைத்து சத்தியம் வாங்கினார்.அன்று முதல் தொடர்ந்த இந்த கலாசாரத்துக்கு இப்போது மு.க.ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்து உள்ளார். எனவே அவரது செயலை மு.க.அழகிரி விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை. மு.க.அழகிரி தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர். அவரது பேச்சை நாங்கள் பொருட்படுத்தவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment