தினகரன் பக்கம் சாய முடிவா?: கண்காணிப்பு வளையத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்

324 0

ஆர்.கே நகரில் தினகரன் வெற்றி பெற்றதற்கு பல அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ரகசியமாக வாழ்த்து கூறியதாக முதல்வருக்கு புகார் வந்ததை அடுத்து அவர்கள் அனைவரும் கண்காணிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #TTVDhinakaran #ADMK

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பிர‌ஷர் குக்கர் சின்னத்தில், சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட டி.டி.வி.தினகரன் 89,013 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார்.

அவர் சுமார் 41 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை வீழ்த்தினார். அவரது திடீர் எழுச்சியால் தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ், கடந்த தேர்தலை விட சுமார் 33 ஆயிரம் வாக்குகளை இழந்ததுடன் டெபாசிட்டையும் பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது.

ஆளும் கட்சியான அ.தி.மு.க.வையும், ஆட்சியையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியாமல் சசிகலாவும் அவர் குடும்பத்தினரும் தவித்து வந்த சூழ்நிலையில், ஜெயலலிதா வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதியில் இருந்து டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. ஆகி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

முதன்முதலாக எம்.எல்.ஏ. ஆகி சட்டசபைக்குள் நுழைய இருக்கும் டி.டி.வி.தினகரன், அடுத்தக்கட்டமாக மெல்ல, மெல்ல கட்சியை கைப்பற்றும் முயற்சிகளில் ஈடுபடுவார் என்று தெரிகிறது. இதனால் அ.தி.மு.க. நிர்வாகிகள் வட்டாரத்தில் பரபரப்பு காணப்படுகிறது.

நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் 1.30 மணிக்கு டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்க உள்ளார். தலைமை செயலகத்தில் சபாநாயகர் அறையில் அவர் பதவி ஏற்றுக் கொள்வார். சபாநாயகர் தனபால் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.

இந்த நிகழ்வை சிறப்பாக கொண்டாட டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். தினகரனுக்கு ஆதரவளித்ததால் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் கலந்து கொள்ள உள்ளனர். தினகரன் ஆதரவு எம்.பி.க்களும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் டி.டி.வி. தினகரன் பதவி ஏற்கும் நிகழ்ச்சியில் சில அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்பார்கள் என்று உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் கூறுகையில், “முதல் கட்டமாக மதுரை மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் வர உள்ளனர். அவர்களைத் தொடர்ந்து மற்ற மாவட்ட எம்.எல்.ஏ.க்களும் தினகரனுக்கு ஆதரவு கொடுப்பார்கள்” என்றனர்.

டி.டி.வி.தினகரனுடன் சில அ.தி.மு.க. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ரகசிய தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சில எம்.எல்.ஏ.க்கள் தினகரன் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கக்கூடும் என்று வெளியாகியுள்ள தகவல்களால் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதையடுத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை ரகசியமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்பேரில் பெரும்பாலான அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தற்போது ரகசிய கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். அந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் ஒவ்வொரு நகர்வும் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு, உடனுக்குடன் தகவல்கள் அ.தி.மு.க. மேலிட தலைவர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

காவல்துறையின் உளவுப்பிரிவு மூலம் இந்த ரகசிய கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. டி.டி.வி. தினகரன் கடந்த ஞாயிற்றுக்கிழமை எம்.எல்.ஏ. ஆக தேர்வானதும் 50-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர் என்று சொல்லப்பட்டது. அவர்களில் 6 பேர் அமைச்சர்கள் என்கிறார்கள்.

இந்த 50 எம்.எல்.ஏ.க்கள் தான் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள். அவர்களது அனைத்து தகவல் தொடர்புகளும் ஒட்டு கேட்கப்படுகிறது. கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானவர்கள் மத்திய மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. #TTVDhinakaran #ADMK

Leave a comment