வன்முறை வெடித்தால் தேர்தல் ஒத்திவைக்கப்படும் – தேர்தல் ஆணையாளர்

312 0

“உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்களிப்பின்போது தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் சம்பவங்கள் இடம்பெறுமானால் இரண்டு வாரங்களுக்கு தேர்தல் ஒத்திவைக்கப்படும்” என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

எந்தத் தொகுதியில்தேர்தல் வன்முறை நடக்கின்றதோ அந்தத் தொகுதிக்கான தேர்தலே இவ்வாறு இடைநிறுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்குமிடையிலான விசேட சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதன்போதே மேற்படி விடயங்கள் தெரிவிக்கப்பட்டன.

“வாக்களிப்பு தினத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் வேட்பாளராலோ அல்லது ஆதரவாளராலோ தேர்தல் சட்டதிட்டங்கள் மீறப்படுமாக இருந்தால் அந்தத் தொகுதிக்கான தேர்தல் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படும். அத்துடன், பெப்ரவரி 7ஆம் திகதிக்குப் பின்னர் தேர்தல் சட்டத்தை மீறும் வகையில் செயற்பட்டாலும் கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்படும்” என்றும் கட்சிப் பிரதிநிதிகளிடம் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.

அத்துடன், நீதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கு ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர். வேட்பாளரொருவர் தனது தொகுதியில் ஓர் அலுவலகத்தை மட்டுமே வைத்துக்கொள்ள முடியும் என்றும், பிரசார நடவடிக்கைகளுக்காக 7 அல்லது 15 பேரை மட்டுமே தம்முடன் இணைத்துக்கொள்ள முடியும் என்றும் இந்தச் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment