கேப்பாப்புலவு மக்களுக்கு சொந்தமான 133ஏக்கர் காணிகள் இன்று அவர்களிடத்தில் மீளவும் கையளிக்கப்படும் என்று சிறைச்சாலை கள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அறிவித்துள் ளார்.
இது தொடர்பில் அமைச்சர் சுவாமிநாதன் விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தேசிய பாதுகாப்புக் கருதி இலங்கைத் தரைப்படையின் பாதுகாப்புப் படைத் தலைமையகமொன்றாக முன்னெடுக்கப்பட்டுவந்த கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கேப்பாபிலவு கிராமத்தில் 133 ஏக்கர் காணிகள் அமைச்சின் ஊடாக 148 மில்லியன் ரூபா படைத் தலைமையகத்தை இடமாற்றுவதற்கு இலங்கைத் தரைப்படைக்கு வழங்கப்பட்டிருந்தது.
அந்த அடிப்படையில், டிசம்பர் மாதம் 28ஆம் திகதி இக்காணிகளை அவற்றின் ஆரம்ப உரித்தாளிகளிடம் மீண்டும் கையளிப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதேச செயலாளருக்கு அறிவிப்பு விடுக்கப்பட்டள்ளது. 290நாட்களுக்கு மேல் தொடர்ந்த உண்ணாவிரதத்தைக் கைவிட்டு அம்மக்களுக்கு தமக்குச் சொந்தமான கணிகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு தற்போது உருவாகின்றது. 2018 ஆம் ஆண்டில் அக்காணிகளில் 85 குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுப்பதற்குரிய நடவடிக்கைகளும் எடுக்கப்படவுள்ளன என்றுள்ளது.
முன்னதாக பாராளுமன்றத்தில் கடந்த எட்டாம் திகதி நடைபெற்ற வரவு செலவுத்திட்ட ஒதுக்கீடுகள் குறித்த தனது அமைச்சின் தெரிவுக்குழு அறிக்கை மீதான விவாதத்தில் கேப்பாபுல தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளான ஸ்ரீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், சிவமோகன், சிவசக்தி ஆனந்தன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் ஈ.பி.டி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் கேள்விகளுக்கு பதிலளித்து உரையாற்றும்போது, டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னதாக கேப்பாபுலவு காணிகள் விடுவிக்கப்படும் என அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.