உள்ளூராட்சி மன்ற தேர்தல்களுக்காக வீடு வீடாக சென்று பிரசார பணிகளில் ஈடுபடுவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மோதல்கள், வன்முறைகள் இடம்பெறுவதை தவிர்க்கும் முகமாக இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி 10 பேருக்கு மேல் குழுவாக பிரசார நடவடிக்கைகளில் வீடு வீடாக செல்ல முடியாது என தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
அதன்படி பிரசார நடவடிக்கைகளில் 10 பேருக்கு மேலதிகமானோர் பங்கேற்பின் அதனை சட்ட விரோத பேரணியாக கருதி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர எச்சரித்தார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கும் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் பிரதி நிதிகளுக்கும் இடையிலான சந்திப்பின் போது பொலிஸ் தரப்பில் விஷேட குழுவொன்று பங்கேற்றதுடன் அக்குழுவின் பாதுகாப்பு தொடர்பிலான உபாயங்களை மையப்படுத்தியே இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் போது, தேர்தல்கள் மற்றும் பொலிஸ் நிர்வாகத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி விஜே குணவர்தன, பொலிஸ் சட்டம் மற்றும் ஒழுக்காற்று பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபருன் தேர்தல்கள் விவகாரம் தொடர்பிலான ஒருங்கிணைப்பாளருமான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி பீரிஸ் மற்றும் பொலிஸ் பேச்சாளர் சட்டத்தரணி ருவன் குணசேகர ஆகியோர் இதில் பங்கேற்றனர்.
இதன்போது அமைதியான தேர்தலினை நடத்துவதற்காக பொலிஸ் தரப்பில் பல்வேறு திட்டங்கள் தேர்தல்கள்கள் ஆணைக் குழு முன்னிலையில் முன்வைக்கப்பட்டன. வீடு வீடாக செல்லும் பிரச்சார நடவடிக்கையை கட்டுப்படுத்தல், போஸ்டர், கட்டவுட் விவகாரங்கள், ஒலி பெருக்கி விவகாரம் போன்றவற்றில் கடும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தினை மையப்படுத்தி இதன் போது பொலிஸ் தரப்பில் முன் மொழிவுகள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பில் கலந்துரையாடியே கடும் நடவடிக்கைகளுக்கு தேர்தல்கள் ஆணைக் குழு பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பில் கலந்துரையாடலின் பின்னர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குனசெகர தெரிவித்ததாவது,
உள்ளூராட்சிமன்ற தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் 81 ஆ அத்தியாயத்துக்கு அமைவாக போஸ்டர்கள் ஒட்டுவதோ, கட்டவுட் வைப்பதோ சட்ட விரோதமாகும். வேட்பு மனு தககல் தினம் முதல் இது அமுலுக்கு வந்துள்ளது. பிரச்சார கூட்டம் இடம்பெறும் இடத்துக்கு உள்ளும் அபேட்சகரின் வாகனத்திலும் மட்டும் போஸ்டர்கள் கட்டவுட்களை ஒட்டிக்கொள்ளலாம். இதனை தவிர ஏனைய நிலைமைகளின் போது பொலிஸார் போஸ்டர் கட்டவுட் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்ப்ட்டுள்ளது. சட்ட விரோதமாக போஸ்டர்கள் கட்டவுட்களை வைப்போரும், அவற்றை உடன் வைத்திருப்போரும் தகுதி தராதரம் பார்க்காது கைது செய்யப்படுவர். அத்துடன் ஏற்கனவே ஓட்டப்பட்டுள்ள போஸ்டர்களை அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை அகற்ற தலைமையக பொலிஸ் நிலையங்களுக்கு 3 தொழிலாளர்கள் வீதமும் ஏனைய பொலிஸ் நிலையங்களுக்கு 2 தொழிலாளர்கள் வீதமும் இணைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நாடளாவிய ரீதியில் 1041 தொழிலாளர்கள் போஸ்டர்களை அகற்றும் பணிகளுக்காக சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர். அவசியம் ஏற்படின் மேலும் தொழிலாளர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு இணைத்துக்கொள்ளப்பட்ட தொழிலாளர் ஒருவருக்கு நாளொன்றுக்கு 1068 ரூபா சம்பளமாக வழங்கப்படவுள்ளது.
பதிவு செய்யப்படாத வாகன பயன்பாடு:
அதே நேரம் தேர்தல் காலத்தில் அபேட்சகர்கள், ஆதரவாளர்கள் பதிவு செய்யப்படாத வாகனங்கள் அல்லது கராஜ் இலக்கத்தகட்டுடன் கூடிய வாகனங்களை பணிகளுக்கு பயன்படுத்துவதாக தகவல் கிடைத்துள்ளது. இது மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தின் 2 ஆம் அத்தியாயத்துக்கு அமைவாக முற்றிலும் சட்ட விரோதமாகும். இவ்வாறு கராஜ் இலக்கத்தில் வாகனம் செலுத்த அச்சட்டத்தின் 43,44 ஆவது அத்தியாயங்களில் சில ஏற்பாடுகள் உள்ளன. எனினும் 1991 ஆகஸ்ட் மாத சுற்று நிருபம் ஒன்றின் பிரகாரம், தேர்தல்கள் காலப்பகுதியான இக்காலப்பகுதியில் பதிவிலக்கம் இல்லாத வாகங்களை செலுத்துவது, பயன்படுத்துவது தண்டனைக் குரிய குற்றமாகும். இது தொடர்பில் பிடியாணை இன்றி அவர்களைக் கைது செய்ய முடியும். அது தொடர்பில் நாம் உன்னிப்பாக அவதானம் செலுத்தியுள்ளோம்.
இன மத பேதங்களை உருவாக்கினால் சட்டம் பாயும்
இதேவேளை, இனம், மதம் மற்றும் பிரிவினை வாத கருத்துக்களை தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்த வேண்டாம் எனவும் அவ்வாறு இனவாத மதவாதத்தை தூன்டும் கருத்துக்களை பரப்புவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் அறியத்தருகின்றோம். குறிப்பாக உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் கீழும் தண்டனை சட்டத்தின் கீழும் இதற்கான ஏற்பாடுகள் உள்ள நிலையில் அனைத்து பொலிஸ் நிலையங்களும் இது தொடர்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக தண்டனை சட்டக் கோவையின் 120, 291 அ, ஆ அத்தியாயங்களின் பிரகாரமும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் 82 எ (1) இன் பிரகாரமும் இவ்வ்வாறு பேதங்களை ஏற்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். வெறுப்புணர்வை தூன்டுவோர் கைது செய்யபப்டுவர்.
பிரசாரத்துக்கு 10 பேருக்கு மட்டும்
தேர்தல் காலப்பகுதியில் வன்முறை அல்லது மோதல் நிகழும் மற்றொரு சந்தர்ப்பமாக நாம் வீடு வீடாக சென்று வாக்குக் கேட்கும் பிரச்சார பணி அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பில் தேர்தல் சட்டத்தில் நேரடி கட்டுப்பாடு இல்லாத நிலையில் இன்று நாம் தேர்தல்கள் ஆணை குழு தலைவர் உள்ளிட்டோருக்கு விடயத்தை தெளிவுபடுத்தினோம். இந் நிலையில் கட்சி செயலாளர்கள் உள்ளிட்டோர் முன்னிலையில் கென்வஷிங் செல்ல முடியுமான ஆகக் கூடிய உறுப்பினர்கள் எண்ணிக்கை 10 ஆக மட்டுப்படுத்தப்ப்ட்டுள்ளது. 10 இர்கு மேர்பட்ட நபர்களை உள்ளடக்கி கெவஷிங் சென்ரால் சட்ட விரோத பேரணியாக அது கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
கட்டுப்பாடு:
போஸ்டர்கள் ஒட்டுவோருக்கும் அதனை வைத்திருப்போருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். எவரிடம் இருந்தாவது போஸ்டர்கள் கைப்பற்றப்படுமாயின் அந்த போஸ்டருக்கு உரிய வேட்பாளரிடமும் நாம் விசாரணை செய்வோம். அது தொடர்பில் விசாரணை அறிக்கை சட்ட மா அதிபருக்கு அனுப்பப்படும். அதில் அந்த வேட்பாளருக்கு எதிராக வழக்கு தாககல் செய்ய அல்லது நடவடிக்கை எடுக்க ஆலோசனை கிடைக்குமாயின் அதனையும் முன்னெடுப்போம்.
இதேவேளை, தேர்தலில் போட்டியிடும் பல உறுப்பினர்கள், குற்றச் செயல்களுடன் தொடர்பு பட்டவர்கள் என கூறப்படுகின்றது. இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக் குழுவுக்கே செயற்படும் அதிகாரம் உள்ளது. யாரேனும் அபேட்சகர் ஒருவர் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக் குழு எம்மிடம் அறிக்கை கோருமாயின், அவரது முன் செய்த்ய குற்றங்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் திரட்டி சமர்ப்பிக்க நாம் தயாராக உள்ளோம். என்றார்.