யாழ்ப்பாணம், பண்ணை சிறைச்சாலை தொகுதி முதற்கட்ட நிர்மாணப்பணிகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவையின் இணைபேச்சாளர் கயந்த கருணாதிலக்க இவ்வாறு தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் மீண்டும் சிவில் நிர்வாகம் நிலைநாட்டப்பட்டதை தொடர்ந்து 2001 ஆம் ஆண்டில் தனியார் வீடுகளில் யாழ்.சிறைச்சாலை தொகுதி நிறுவப்பட்டது.
எனினும் தேசிய எதிர்பார்ப்புக்களை நிறைவுசெய்யக்கூடிய விதத்தில் அவசியமான அடிப்படை வசதிகள் கூட அவற்றில் காணப்படவில்லை.
சிறைச்சாலைகள் திணைக்களம் வசமுள்ள காணியொன்றில் ஆயிரம் கைதிகளை தடுத்து வைக்ககூடிய யாழப்பாணம் பண்ணை சிறைச்சாலை தொகுதியை நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இதன்மூலம் 130 கைதிகளுக்கு போதிய தங்குமிட வசதிகள் காணப்படுகின்றது. அதன் இரண்டாம் கட்டத்தினை 623.32 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்வதற்கு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம், மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் சுவாமிநாதன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.