தமிழர் தாயகப் பிரதேசமான கிளிநொச்சியில் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்த முன்னாள் போராளி ஒருவர், வெள்ளைவான் கடத்தல் பாணியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
கிளிநொச்சி தொண்டைமான் பகுதியைச் சேர்ந்த மோகனசீலன் நிசாந்தன் என்ற 26 வயதுடைய முன்னாள் போராளியே வெள்ளைவானில் வந்தவர்களால் அடித்து, கைவிலங்கிட்டு கடத்திச் செல்லப்பட்டதாக அவரது தெரிவித்தார்.
இது குறித்து பொலிசாரிடம் கேட்டபோது கிளிநொச்சி பொலிசார் தமக்கு எதுவும் தெரியாது என கூறிய நிலையில், களவுச் சம்பவமொன்று தொடர்பில் தாமே கைதுசெய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் தமிழீழத்தின் நிர்வாகத் தலைநகரமாக விளங்கிய கிளிநொச்சி நகரை அண்மித்த தொண்டைமான் பகுதியிலுள்ள தனது வீட்டிற்கு நேற்றைய தினம் மாலை, வெள்ளை வானில் வந்த இனந்தெரியாத நபர்கள், தனது மகனை அடித்து கைவிலங்கிட்டு வெள்ளைவானில் கடத்திச் சென்றதாக மோகனசீலன் நிசாந்தன் என்ற முன்னாள் போராளியின் தாயார் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து கிளிநொச்சி பொலிஸாரிடம் கேட்டபோது, அவர்கள் இதுதொடர்பில் தமக்கு எதுவும் தெரியவில்லை என்று கூறியதாகக் குறிப்பிட்ட தாயார் பின்னர் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு சென்று விசாரித்துள்ளார்.
எனினும், கொள்ளைச் சம்பவம் ஒன்று தொடர்பில் தாங்களே அவரைக் கைது செய்துள்ளதாகத் தெரிவித்த வவுனியா பொலிஸார், நாளைய தினம் முன்னாள் போராளியான மோகனசீலன் நிசாந்தனை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் கூறினர்.
எவ்வாறாயினும் வவுனியா பொலிஸாரால் தெரிவிக்கப்படுகின்ற கைது விவகாரம் தொடர்பில் தனக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை என கூறிய நிசாந்தனின் தாயார், இதுவரை தனது மகனை தனக்கு காட்டவில்லை எனவும் கண்ணீர் மல்க குறிப்பிட்டார்.
சரவதேச காணாமல்போனோர தினம் அனுட்டிக்கப்பட்ட ஓகஸ்ட் 30 ஆம் திகதியான நேற்றைய தினம்,இறுதிக்கட்ட போரின் போது சரணடைந்த நிலையில் சிறிலங்கா இராணுவத்தினரின் புனர்வாழ்வு முகாம் என அழைக்கப்பட்ட தடுப்பு முகாமில் நான்கு வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டு புனர்வாழ்வு வழங்கி விடுதலையாகியிருந்த நிலையில் கிளிநொச்சி தொண்டைமான் கிராமத்தைச் சேர்ந்த மோகனசீலன் நிசாந்தன் என்ற 26 வயதுடைய முன்னாள் போராளி வவுனியா பொலிஸாரால் கடத்தல் பாணியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அதுவும் மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு ஐ.நா வின் உயர் அதிகாரிகள் சகிதம், ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பேங் கீ மூன் சிறிலங்காவிற்கு விஜயம்செய்வதற்கு முதள் நாள் இந்த வெள்ளை வான் கடத்தல் பாணியில் கைது இடம்பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.