நாடு பூராகவும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் டெங்கு நோயிலிருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாக்கும் நோக்கில் பாடசாலை மட்டத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமின் பணிப்பின் பேரில் கல்வி அமைச்சினால் குறித்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அதன்படி 2018ம் வருடத்திற்கான முதலாவது பாடசாலை வாரம் ஆரம்பிக்கப்பட முன்னர் இம்மாதம் 30, 31ம் திகதிகளில் அனைத்து பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நடைபெறவுள்ளது.
தேசிய டெங்கு ஒழிப்பு திட்டத்தில் அனைத்து பாடசாலைகளையும் டெங்கு நோய் அற்ற வலயமாக மாற்றும் திட்டமாக நடைபெறும் இந்நிகழ்வினை வெற்றிகரமாக நடாத்துவதற்கு வலயக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகள் அனைவரும் முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும் எனவும் இது தொடர்பிலான ஆய்வறிக்கை ஒன்று வலய மட்டத்தினூடாக கல்வி அமைச்சிற்கு சமர்பிக்கப்படவேண்டும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் பாடசாலை சூழலை சுத்தப்படுத்துவதற்காக பெற்றோர், முப்படை வீரர்கள், பொலிஸார், சிவில் பாதுகாப்பு படை மற்றும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாரச்சி மூலம் அனைத்து பாடசாலைகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாடசாலை சூழலை சுத்தமாக வைக்கும் நோக்கில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பாடசாலை சூழலை சுத்தப்படுத்தும் நடவடிக்கையை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கு பாடசாலை பிரதானிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கல்வி அமைச்சின் செயளாலர் மூலம் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதவேளை எங்காவது பாடசாலை சூழல்களில் டெங்கு நோய் பரவுவதற்கான வாய்ப்பு இருந்து அதற்குரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் அதற்குரிய முழுப்பொறுப்பையும் பாடசாலை பிரதானிகள் ஏற்க வேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள சுற்றுநிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.