பிரதேச ஊடகவியலாளர்களின் தொழில்சார்ந்த பிரச்சினைகள் குறித்து கண்டறிந்து அவற்றிற்கான தீர்வுகளை வழங்குவதற்கு பரிந்துரைகளை முன்வைப்பதற்காக விசேட குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பணிப்புரை வழங்கினார்.
அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் மற்றும் ஊடகத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் தொழில் ஆணையாளர் நாயகம் ஆகியோரைக்கொண்ட இக்குழு மூன்று மாதக் காலப்பகுதியில் இது தொடர்பான அதன் அறிக்கையை தனக்கு சமர்ப்பிக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பிரதேச ஊடகவியலாளர்களின் தொழில்சார்ந்த பிரச்சினைகள் குறித்து இன்று (27) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
பிரதேச ஊடகவியலாளர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், ஊடகவியல் துறையில் அவர்கள் முகம்கொடுத்துள்ள பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் தொழிற்சங்க சம்மேளனத்தின் 6 வது பிரதிநிதிகள் மாநாட்டில் ஜனாதிபதி அவர்களிடம் முன்வைக்கப்பட்ட அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இராஜாங்க அமைச்சர் ஷிரானி விக்கிரமரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ, நிதி, ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் சுதர்ஷன குணவர்தன, தொழில் ஆணையாளர் நாயகம் ஏ.விமலவீர, ஊடகவியலாளர் தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் கருணாரத்ன கமகே, தலைமை செயலாளர் தர்மசிறி லங்காபேலி ஆகியோர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.