ஐ.நா. தடையை மீறி புதிய செயற்கைகோளை பறக்கவிட வடகொரியா தயார் ஆகிறது

612 25

ஐ.நா. தடையை மீறி புதிய செயற்கைகோளை பறக்க விட வடகொரியா தயார் ஆகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளதால் கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றமான சூழல் நிலை உருவாகி உள்ளது.

கிழக்காசிய நாடுகளில் ஒன்றான வடகொரியா தனது அண்டை நாடுகளான தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவை அச்சுறுத்தும் வகையில் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. கடந்த மாதம் 29-ந் தேதி ஹூவாசாங்-15 என்னும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்தது.

ஏற்கனவே வடகொரியா நடத்திய அணு ஆயுத சோதனைகளுக்காக அந்த நாட்டின் மீது பல்வேறு பொருளாதார தடைகளை அறிவித்திருந்த ஐ.நா. ஹூவாசாங்-15 சோதனையில் கடும் அதிருப்தி அடைந்து மேலும் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது. இனி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை, செயற்கைகோள்களை செலுத்துவது உள்ளிட்ட விண்வெளி தொடர்பான எந்த சோதனையிலும் ஈடுபடக்கூடாது என்று வடகொரியாவுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தென்கொரியாவில் இருந்து வெளியாகும் ஜூன்காங்க் இல்போ என்னும் நாளிதழ், வெளியிட்டுள்ள செய்தியில், அண்மையில் எங்களுக்கு கிடைத்த பல்வேறு தகவல் களின் அடிப்படையில், வடகொரியா ஒரு புதிய செயற்கைகோளை தயாரித்து இருப்பது தெரியவந்துள்ளது. அதற்கு குவாங்மியோங்சாங்-5 என்று பெயர் சூட்டியும் உள்ளனர் என்று தெரிவித்து உள்ளது.

அவர்களின் திட்டம், அதிநவீன கேமராக்களும், தொலைத்தொடர்பு சாதனங்களும் கொண்ட ஒரு செயற்கைகோளை விண்ணில் நிலை நிறுத்தவேண்டும் என்பதாகும் என்று அதில் கூறப்பட்டு உள்ளது. எனினும் அந்த செயற்கைகோள் உளவு பார்க்கும் பணிக்காக ஏவப்படலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இந்த தகவலை வடகொரியாவில் இருந்து வெளியாகும் ரோடாங் சின்முன் என்ற நாளிதழும் உறுதி செய்துள்ளது.

அமைதியான விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் நாடுகளின் இறையாண்மை என்ற தலைப்பில் அந்த நாளிதழில் வெளியாகி உள்ள ஒரு கட்டுரையில் விண்வெளி தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் முயற்சியை மேற்கொள்வதற்காக செயற்கைகோளை ஏவுவதற்கான அனைத்து சட்டப்பூர்வ உரிமைகளும் வடகொரியாவுக்கு உண்டு எனவும் அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

ஐ.நா.வுக்கான வடகொரிய துணைத் தூதர் கிம்-ரியோங் கடந்த அக்டோபர் மாதம் ஐ.நா.சபை கூட்டத்தில் பேசும்போது, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக மக்களின் நலன்களுக்காகவும் 2020-ம் ஆண்டு வரை செயற்கைகோள் களை தயாரிப்போம் என்று தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி தென்கொரிய ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவும் இந்த நேரத்தில் வடகொரியா புதிய செயற்கைகோள் ஒன்றை விண்ணில் செலுத்துவதை சாதாரண விஷயமாக கருத முடியாது. செயற்கைகோள் சோதனை என்றபெயரில் மறைமுகமாக நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணை சோதனை நடத்தும் முயற்சியாகவும் இருக்கலாம் என்று குறிப்பிட்டார்.

ஐ.நா. விதித்துள்ள தடையை மீறி குவாங்மியோங்சாங்-5 செயற்கைகோள் எப்போது விண்ணில் செலுத்தப்படும் என்பது தெரியவில்லை. அனேகமாக இன்னும் ஓரிரு வாரங்களில் அது ஏவப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கொரிய தீபகற்ப பகுதியில் சற்று தணிந்திருந்த போர் பதற்றம் மீண்டும் அதிகரித்து உள்ளது.

Leave a comment