ஜாதவ் குடும்பத்தினர் அவமரியாதையாக நடத்தப்படவில்லை: இந்தியா சுமத்தும் குற்றச்சாட்டுக்கு பாக். மறுப்பு

10988 53

ஜாதவ் குடும்பத்தினர் அவமரியாதையாக நடத்தப்பட்டதாக இந்தியா சுமத்தும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என பாகிஸ்தான் வெளியுறவு துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக கூறி, இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி குல்பூ‌ஷன் ஜாதவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஜாதவை பார்க்க அவரது மனைவி மற்றும் தாயாருக்கு பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கியது.

இதற்கிடையே, இஸ்லாமாபாத்தில் ஜாதவ் மனைவியும், தாயாரும் அவரை நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது பாதுகாப்பு என்ற பெயரில் தாலி, வளையல்களை கழற்ற வைத்தும் நெற்றியில் இருந்த பொட்டை அழிக்கச் செய்தும் இந்த சந்திப்பு நடந்ததாக செய்தி வெளியானது. விரும்பத்தகாத இந்த செயலுக்காக பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சகம் இந்தியாவின் இந்த குற்றச்சாட்டை அடிப்படை ஆதாரமற்றது என மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் மொகமது பைசல் கூறுகையில், ஜாதவ் குடும்பத்தினர் பாகிஸ்தானில் அவமரியாதையாக நடத்தப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. அது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. நல்ல மனநிலையில் ஜாதவ் அவரது குடும்பத்தினரை சந்தித்து பேசியுள்ளார் என தெரிவித்துள்ளார்.

Leave a comment