இராணுவத்தினரிடமுள்ள பூந்தோட்டம் கூட்டுறவு பாடசாலையை விடுவிக்க வேண்டும்

463 0

download (6)வவுனியா குடியிருப்பு கலாசார மண்டபத்தை விடுவித்ததை போன்று பூந்தோட்டம் கூட்டுறவு பாடசாலையையும் விடுவிக்க வேண்டும் என வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.  இராணுவத்தினரிடம் இருந்த வவுனியா குடியிருப்பு கலாசார மண்டபம் அண்மையில் விடுவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பூந்தோட்டம் கூட்டுறவு பயிற்சிக் கல்லூரியையும் விடுவிக்க வேண்டுமெனவும், குடியிருப்பு கலாசார மண்டபத்தை புனரமைப்பதற்கு நிதியொதுக்கீடு செய்யுமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப. சத்தியலிங்கம் கடிதம் அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது, கடந்த வருடம் தங்களின் தலைமையில் நடைபெற்ற வடகிழக்கு மீள்குடியேற்றம் தொடர்பிலான கூட்டத்தில் வவுனியா மாவட்டத்தில் பொது கட்டிடங்களில் நிலைகொண்டுள்ள இராணுவ முகாம்களை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தேன்.

அதன்பின்னர் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பக்குழு கூட்டத்திலும் இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது.அதன் தொடர்ச்சியாக இந்த மாதம் 12 ஆம் திகதி தங்களை சந்தித்தபோது, இந்த விடயத்தை மீண்டும் வலியுறுத்தியிருந்தேன்.

கடந்த 18 ஆம் திகதி தொடக்கம் குடியிருப்பு கலாசார மண்டபத்தில் நிலைகொண்டிருந்த இராணுவம் வெளியேறியுள்ளனர்.கடந்த 02 தசாப்த காலமாக பொதுமக்கள் செறிந்து வாழும் பகுதியில் இராணுவ முகாம் அமைந்திருந்தது. இதனால் அருகிலுள்ள பாடசாலை, இந்து ஆலயம் மற்றும் சிறுவர் பூங்கா என்பவற்றிற்கு வருகை தரும் பொது மக்கள் பிரச்சினைகளை எதிர்நோக்கியிருந்தனர்.

தங்களின் உத்தரவின் பேரில் முகாமானது அகற்றப்பட்டமைக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். நீண்ட காலமாக இராணுவத்தினர் பயன்படுத்தியமையினால் மண்டபம் சேதமடைந்து காணப்படுகின்றது.இதனை புனரமைப்பதற்கு நிதியொதுக்கீடு செய்யுமாறு தங்களை வினயமாக கேட்டுக்கொள்கின்றேன்.

அதேபோன்று பூந்தோட்டத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண கூட்டுறவு பயிற்சிப் பாடசாலை 2009 இல் இருந்து புனர்வாழ்வு முகாமாக இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. வடக்கு மாகாணத்தின் ஒரேயொரு கூட்டுறவு பயிற்சிப் பாடசாலை இதுவாகும். தாங்கள் உறுதியளித்ததன் பிரகாரம் கூட்டுறவு பயிற்சிப் பாடசாலையையும் மாகாண கூட்டுறவுத் திணைக்களத்திடம் கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.