அ.தி.மு.க.வின் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டிருந்தாலும் அதற்கு கட்டுப்படுவேன். கட்சியும், சின்னமும் எங்கு இருக்கிறதோ, அங்குதான் இருப்பேன் என அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்வி குறித்து அ.தி.மு.க.வின் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் 6 மாவட்ட செயலாளர்கள் நீக்கம் உள்பட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், வீரமணி, ராஜேந்திர பாலாஜி, பாஸ்கரன் உள்பட 5 பேர் கலந்து கொள்ளவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் பாஸ்கரன் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-
நேற்று முன்தினம் சென்னையில் இருந்து ஊருக்கு திரும்பும்போது ஆலோசனை கூட்டம் குறித்த தகவல் தாமதமாக கிடைத்ததால் என்னால் அதில் பங்கேற்க முடியவில்லை. நேற்று நடந்த கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டிருந்தாலும் அதற்கு நான் கட்டுப்படுவேன்.
கட்சியும், சின்னமும் எங்கு இருக்கிறதோ, அங்குதான் நான் இருப்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.