ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்களை இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் நீக்க முடியாது: சி.ஆர்.சரஸ்வதி

340 0

ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்களை இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் நீக்க முடியாது என்று அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட நடிகை சி.ஆர்.சரஸ்வதி கூறினார்.

அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட நடிகை சி.ஆர்.சரஸ்வதி கூறியதாவது:-

கடந்த நவம்பர் 23-ந்தேதி எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் இணைந்தார்கள். தலைமைக் கழகத்தில் இருந்து வெளியே வந்தபோது நிர்வாகிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எதுவும் உண்டா என்று பத்திரிகையாளர்கள் கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த ஓ.பி.எஸ் ‘அம்மாவால் நியமிக்கப்பட்ட யாரையும் நீக்க மாட்டோம்’ என்றார். அன்று அப்படி சொன்னவர்தான் இன்று இப்படி செய்துள்ளார்.

அம்மா ஆஸ்பத்திரியில் இருந்தபோது நோய் தொற்று ஏற்பட்டு விடும் என்பதால்தான் யாரையும் அனுமதிக்கவில்லை என்றார். அதன்பிறகு அம்மாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்றார்.

பதவிக்காக எதை வேண்டுமானாலும் மாற்றி மாற்றி பேசுவார்கள். இன்னும் கொஞ்ச நாளில் அம்மா என்றால் யார் என்று கேட்பார்கள்.

எல்லோரும் சேர்ந்துதான் சசிகலாவை பொது செயலாளராக தேர்வு செய்தார்கள். அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது.

கட்சி விதிப்படி பொதுச் செயலாளரால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் பொதுச் செயலாளருக்கு மட்டும்தான் உண்டு. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று தங்களுக்கு ஒரு பதவியை உருவாக்கி கொண்டு நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் கிடையாது.

அம்மா என்னிடம் எவ்வளவு பாசமாக இருந்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். மூன்று முறை வாரிய தலைவர் பதவி, திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் பதவி தந்தார்கள். நாங்களெல்லாம் அம்மாவின் விசுவாசிகள். அம்மாவின் ஆசி யாருக்கு? அம்மாவின் தொண்டர்களும், விசுவாசிகளும் யார் பக்கம்? என்பதை ஆர்.கே.நகர் தேர்தலில் மக்கள் சொல்லிவிட்டார்கள். இ.பி.எஸ்-ஓ.பி.எஸ்.சை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

அதிகாரமும், ஆட்சியும் அவர்களிடம் இருக்கலாம். ஆனால் அம்மாவின் ஆசியும், மக்கள் செல்வாக்கும் இருப்பது துணை பொது செயலாளர் தினகரனுக்கு தான்.

கட்சியில் இருந்து நீக்குவதாக சொல்லி பயமுறுத்திப் பார்க்கிறார்கள். இந்த மிரட்டலுக்கு யாரும் பயப்பட போவதில்லை.இவ்வாறு சி.ஆர்.சரஸ்வதி கூறினார்.

Leave a comment