மாயாஜாலங்கள் செய்து தினகரன் வெற்றி: முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் குற்றச்சாட்டு

260 0

ஆர்.கே.நகரில் மாயாஜாலங்கள் செய்து டிடிவி தினகரன் வெற்றி பெற்றுள்ளதாக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான கே.பழனிசாமி ஆகியோர் தலைமையில் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்குப் பிறகு நிருபர்களிடம் முதல்வர் பழனிசாமி கூறியதாவது:

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும், டிடிவி தினகரனும் ரகசிய உடன்பாடு வைத்து கூட்டுச் சதி செய்து இரட்டை இலை சின்னத்தை தோற்கடிக்க வேலை செய்தனர். தினகரன் வெற்றிக்கும், திமுக டெபாசிட் இழந்ததற்கும் இதுவே காரணம். தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை. அதிமுகவுக்கு இரண்டு கண்களும் போக வேண்டும் என ஸ்டாலின் கருதினார். ஆனால், இப்போது திமுகவுக்குதான் இரண்டு கண்களும் போய்விட்டது.

ஆர்.கே.நகரில் தினகரன் எப்படி வெற்றி பெற்றார் என்பது ஊடகங்கள், பொதுமக்கள், எதிர்க்கட்சிகள் உட்பட அனைவருக்கும் தெரியும். மாயாஜாலம்போல பல தந்திரங்களை செய்து பெற்ற வெற்றி. இது உண்மையான வெற்றி அல்ல.இந்தத் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை நாங்கள் பயன்படுத்தவில்லை. நாங்கள் பதவியேற்றபோது, பட்ஜெட் தாக்கல் செய்யும் வரை இந்த அரசு நீடிக்குமா என்றார்கள். பிறகு பட்ஜெட் கூட்டம் நடக்குமா என்றார்கள். மானியக் கோரிக்கை கூட்டம் முடியும் வரை ஆட்சி தொடருமா என்றார்கள். ஆனால், 11 மாதங்களாக சிறப்பான முறையில் ஆட்சி நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:

ஆர்.கே.நகரில் நடைபெற்ற தில்லுமுல்லுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிப்போம். ஆர்.கே.நகர் மக்கள் 20 ரூபாய் நோட்டுகளைக் காட்டி ரூ.10 ஆயிரம் எப்போது கிடைக்கும் என கேட்பதாக செய்திகள் வருகின்றன. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம். தேர்தல் முறைகேடுகளை தேர்தல் ஆணையம்தான் தடுக்க முடியும்.

அதிமுக என்ற கட்சி எந்தவொரு குடும்பத்திடமும் சென்றுவிடக் கூடாது என்பதற்காகவே நாங்கள் இணைந்தோம். அதிமுகவில் குழப்பத்தை விளைவிக்க தினகரன் முயற்சி செய்கிறார். எங்களிடம் இருந்து சிறிய செங்கலைக்கூட அவர்களால் உருவ முடியாது. அரசியலில் வெற்றி, தோல்விகள் சகஜமானது.

இவ்வாறு அவர் கூறினர்.

திமுகவே இல்லையா?

தமிழக அரசின் செயல்பாடுகள் சரியில்லாததால் இந்த தோல்வியா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு முதல்வர் பழனிசாமி அளித்த பதிலில், ‘‘தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளுடனும் கூட்டணி வைத்தும் திமுக டெபாசிட் இழந்துள்ளது. இதனால், திமுக என்ற கட்சியே இல்லை என்று கூறிவிட முடியுமா? எடப்பாடி தொகுதியில் நான் வெற்றியும் பெற்றுள்ளேன். தோல்வியும் அடைந்துள்ளேன். ஆர்.கே.நகர் தோல்வியால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இதை தோல்வியாகவே நாங்கள் பார்க்கவில்லை’’ என்றார்.

Leave a comment