தினகரனால் மட்டுமே அதிமுகவை காப்பாற்ற முடியும்: ஆதரவாளர் புகழேந்தி கருத்து

262 0

அதிமுக தொண்டர்கள் டிடிவிதினகரன் தலைமையை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்று அவரது ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்தார்.

கோவையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றியின் மூலம் அதிமுகவின் தன்மானத்தை தினகரன் காப்பாற்றியுள்ளார். அதிமுகவில் இருந்து நான் உள்ளிட்ட சிலரை நீக்குவதாக அறிவித்துள்ளனர். தேர்தல் தோல்வியால் ஆளுங்கட்சியினர் பெரிய குழப்பத்தில் உள்ளனர்.

என்னை கர்நாடக மாநில அதிமுக பொறுப்பாளராக நியமித்தவர் ஜெயலலிதா. நான் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் கட்சிப் பணியாற்றி வருகிறேன்.சசிகலா மற்றும் தினகரனால் மட்டுமே அதிமுகவை வழிநடத்த முடியும். வேறு யாராலும் கட்சியை வழி நடத்த முடியாது.

ஆர்.கே.நகரில் தினகரன் போட்டியிடாமல் இருந்திருந்தால், திமுக வெற்றி பெற்றிருக்கும். தினகரன் போட்டியிட்டதால்தான் திமுக டெபாசிட் தொகையை இழந்தது. இந்த வெற்றியின் மூலம் அதிமுகவின் தன்மானம் காக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவுக்காக ஜாமீன் கொடுத்த என்னை கட்சியிலிருந்து நீக்கியுள்ளனர். துணிச்சல் இருந்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களை கட்சியில் இருந்து நீக்கவேண்டும். தினகரனால் மட்டும் கட்சியைக் காப்பாற்ற முடியும்.

எங்களுக்கும் திமுகவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. டெல்லியில் திராவிட இனத்தை அடமானம் வைத்தனர் ஆளும் கட்சியினர். ஆனால், தினகரன் யார் தயவையும் நாடவில்லை. அமைச்சர்களோ, எம்எல்ஏக்களோ கட்சி அல்ல. தொண்டர்கள்தான் கட்சியின் உயிர் நாடி. அந்த தொண்டர்கள் தினகரனின் தலைமையை ஏற்றுக்கொண்டுள்ளனர். அனைத்து எம்எல்ஏக்களும் தினகரனின் தலைமையை ஏற்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மதுசூதனன் தோற்றதற்கு முக்கிய காரணம் அமைச்சர் ஜெயக்குமார்தான் என்றார்.

Leave a comment