மட்டக்களப்பில் சுட்டுப்படுகொலை செய்யப்படட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 12ஆவது நினைவு நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு, அரசடி தேவநாயகம் மண்டபத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் இளைஞர் அணித் தலைவர் கி.சேயோன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, ஜோசப் பரராஜசிங்கத்தின் உருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், அமரரின் குடும்பத்தினர், ஆதரவாளர்கள், பொதுமக்கள், எனப் பலரும் கலந்துகொண்டனர்.
ஜோசப் பரராஜசிங்கம் 2005 ஆம் ஆண்டு புனித நத்தார் தினத்தன்று மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் இடம்பெற்ற நள்ளிரவு ஆராதனையின் போது துப்பாக்கிச் சூட்டில்படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.