மரணதண்டனை விதிக்கப்பட்ட குல்பூஷண் ஜாதவை அவருடைய மனைவி மற்றும் தாயார் இன்று(திங்கட்கிழமை) சந்திக்க உள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றியவர் குல்பூஷண் ஜாதவ்(வயது 47). இவர், ஈரான் நாட்டில் இருந்து பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்துக்குள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊடுருவி உளவு பார்த்ததாகவும், பயங்கரவாதச் செயல்களை தூண்டிவிட்டதாகவும் கூறி பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது. அவருக்கு ராணுவ கோர்ட்டு மரண தண்டனை விதித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா முறையிட்டது. இதன் மீது இறுதி தீர்ப்பு இன்னும் வழங்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில் இஸ்லாமாபாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குல்பூஷண் ஜாதவை அவருடைய மனைவி மற்றும் தாயார் சந்திக்க அனுமதிக்கவேண்டும் இந்தியா வேண்டுகோள் விடுத்தது. முதலில் இதற்கு மறுத்த பாகிஸ்தான் அரசு பின்னர் ஏற்றுக்கொண்டு இருவருக்கும் அண்மையில் ‘விசா’ வழங்கியது.
இதையடுத்து குல்பூஷண் ஜாதவை சந்திக்க அவருடைய மனைவி மற்றும் தாயார் இன்று(திங்கட்கிழமை) இஸ்லாமாபாத் செல்கின்றனர். இதை உறுதி செய்துள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் விடுத்த அறிக்கையில், “ஜாதவின் மனைவி மற்றும் தாயார் 25-ந்தேதி(இன்று) பயணிகள் விமானம் மூலம் இஸ்லாமாபாத் வருகின்றனர். ஜாதவை சந்தித்துவிட்டு அன்றே அவர்கள் இந்தியா திரும்பி விடுவார்கள்” என்று கூறியுள்ளது. இந்த சந்திப்பின்போது ஜாதவின் மனைவி, தாயாருடன் பாகிஸ்தானுக்கான இந்திய துணைத் தூதர் ஜே.பி.சிங்கும் இருப்பார் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.