ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டி.டி.வி.தினகரன், முன்பு வெற்றி பெற்ற ஜெயலலிதாவை விட கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் தற்போது வென்றுள்ளார்.
கடந்த ஆண்டு மே மாதம் நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா, சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டார். இத்தேர்தலில் ஜெயலலிதா 97 ஆயிரத்து 218 வாக்குகள் பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் சிம்லா முத்துசோழனை விட 39 ஆயிரத்து 545 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.
ஆனால் தற்போது நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட டி.டி.வி.தினகரன் 89 ஆயிரத்து 13 வாக்குகள் பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை விட 40 ஆயிரத்து 707 வாக்குகள் கூடுதலாகவே பெற்றுள்ளார். இதன்மூலம் முன்பு வெற்றி பெற்ற ஜெயலலிதாவை விட, கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் தற்போது டி.டி.வி.தினகரன் வென்றுள்ளார்.
டி.டி.வி.தினகரன் பெற்ற வாக்குகள் மீதமுள்ள 58 வேட்பாளர்கள் பெற்றுள்ள மொத்த வாக்குகளைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.