கைத்துப்பாக்கியுடன் சென்றதாகக் கூறப்படும் பொலிஸார் இருவர் வீதியோரம் நின்றிருந்த இளைஞனை அச்சுறுத்தி அவரது மோட்டார் சைக்கிளைப் பறித்துச் சென்றனர் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.
“3 மணித்தியாலங்களின் பின்னரே அதனைப் பொலிஸ் நிலையத்தில் வைத்துத் தந்தனர்.குறித்த மோட்டார் சைக்கிளுடன் 3 மணித்தியால இடைவேளையில் பொலிஸார் ஏதாவதுசிக்கலுக்குரிய விடயங்களைச் செய்திருந்தால் எமக்கே சிக்கல் வரும். இவ்வாறான செயற்பாடுகளுக்கு என்ன நடவடிக்கை?”இவ்வாறு பாதிக்கப்பட்ட தரப்பினர் கேள்வியெழுப்புகின்றனர்.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் நேற்று முற்பகல் இடம்பெற்றது.பாதிக்கப்பட்ட தரப்பினர் காரைநகரைச் சேர்ந்தவர்கள். “நான் நண்பர்களுடன் வீதியோரம் மோட்டார் சைக்கிளில் நின்றிருந்தபோது, இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் வந்து எமக்கு அருகில் நிறுத்தினர். தாங்கள் துப்பாக்கி வைத்திருக்கின்றோம் என்றுகூறியவாறு துப்பாக்கி இடுப்பில் சொருகி வைக்கப்படும் பகுதியில் கை வைத்தனர். மோட்டார் சைக்கிளைத் தருமாறு அச்சுறுத்தினர். பயத்தில் கொடுத்தோம். யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்துக்கு வந்து பெற்றுச் செல்லுமாறுகூறியவாறு அந்த இடத்திலிருந்து தமது மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டனர்” என்று மோட்டார் சைக்கிளைப் பறிகொடுத்த தரப்பினர் தெரிவித்தனர்.
“அது குறித்து முறையிட யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்துக்குச் சென்றோம். அங்கு அவர் இல்லை. வடக்கு மாகாண மூத்த பிரதிப்பொலிஸ்மா அதிபர் அலுவலகத்துக்குச் சென்றோம். யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்துக்குச் செல்லுமாறு அவர் கூறினார்.
அதன்படி யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத் துக்குச் சென்றபோது அங்கு எமது மோட்டார் சைக்கிளைக காணவில்லை. அதனால் அங்கு காத்திருந்தோம். மதியம் 2.30 அளவில் குறித்த மோட்டார் சைக்கிள் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டுவரப்பட்டது. அதன்பின்னர் எம்மிடம் தந்து அனுப்பிவிட்டனர். அது குறித்து நாம் முறைப்பாடு பதிவு செய்யவுள்ளதாகக்கூறியபோதும் அவர்கள் அதனை ஏற்கவில்லை.
அவர்கள் எமது வாகனங்களை இவ்வாறு வாங்கிச் சென்று குற்றஞ்செயல்களில்ஈடுபட்டால் தமக்குத் தான் பாதிப்பு வரும். சிவில் உடையில் குறித் இரண்டு பொலிஸாரும் எமது மோட்டார் சைக்கிளைப் பறித்துச் சென்றிருந்தனர். எங்காவது விபத்து அல்லது அடிதடி இடம்பெற்றால் எதிர்த் தரப்பினர் குறித்த மோட்டார் சைக்கிள் இலக்கத்தைக் குறித்து வைத்திருந்தால் தமக்கே பாதிப்பு பல வகைகளிலும் வரும். இது குறித்து மேலதிக நடவடிக்கையைக் கோவுள்ளோம்” என்று பாதிக்கப்பட்டவர்கள் மேலும் தெரிவித்தனர்.