அமெரிக்காவை தொடர்ந்து இஸ்ரேலுக்கு ஆதரவாக தன் நாட்டு தூதரகத்தை ஜெருசலேம் நகருக்கு மாற்றப்போவதாக கவுதமாலா அதிபர் அறிவித்துள்ளார்.
இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த மாதம் அறிவிப்பை வெளியிட்டார். மேலும், தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றவும் அவர் உத்தரவிட்டார். டிரம்ப் முடிவுக்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தன. பாலஸ்தீனத்தில் இது பெரும் கொந்தளிப்பான நிலையை ஏற்படுத்தியது.
இதனை அடுத்து, அமெரிக்காவின் இந்த முடிவை திரும்பப்பெறக்கோரி சில தினங்களுக்கு முன்னர் ஐ.நா பொதுச்சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதனை ஆதரித்து வாக்களிக்கும் நாடுகளுக்கு நிதியுதவிகள் நிறுத்தப்படும் என்று டிரம்ப் வெளிப்படையாகவே மிரட்டல் விடுத்தார்.
இருப்பினும், 128 நாடுகள் இந்த தீர்மானத்தை ஆதரித்தன. 9 நாடுகள் மட்டுமே எதிர்த்து வாக்களித்தது. இதனால், அமெரிக்காவுக்கு நெருக்கடியான சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், இந்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்த நாடுகளில் ஒன்றாக கவுதமாலா, டெல் அவிவ் நகரில் உள்ள தனது தூதரகத்தை ஜெருலேமுக்கு மாற்றப்போவதாக அறிவித்துள்ளது.
இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் பேசிய பின்னர் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கவுதமாலா அதிபர் ஜிம்மி மோராலெஸ் கூறியுள்ளார். மத்திய அமெரிக்க நாடான கவுதமாலா, அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடு என்பது குறிப்பிடத்தக்கது.