ஐ.நா.வுக்கான இந்திய செயலாளராக உள்ள ஏனாம் கம்பிர் டெல்லியில் உள்ள தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருக்கும் போது அவரது விலை உயர்ந்த செல்போனை கொள்ளையர்கள் வழிப்பறி செய்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்திய பிரதிநிதிகள் குழுவில் செயலாளராக இருப்பவர் ஏனாம் கம்பிர். ஐ.எப்.எஸ் அதிகாரியான இவர் தற்போது டெல்லியில் உள்ள தனது இல்லத்திற்கு விடுமுறைக்காக வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை தனது இல்லத்தின் அருகே தாயாருடன் ஏனாம் நடந்து வந்து கொண்டிருக்கும் போது, மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் அவரிடமிருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்து சென்றுள்ளனர்.
பணி சம்பந்தமான ஆவணங்கள் மற்றும் அமெரிக்க சிம் கார்டு அந்த போனில் இருந்ததாக போலீசில் புகார் அளித்துள்ள ஏனாம் தெரிவித்துள்ளார். கொள்ளை தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்னர் கூடிய ஐ.நா பொதுச்சபையில், பாகிஸ்தானை ‘டெரரிஸ்தான்’ என விமர்சித்து பிரபலமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.