ஆர்.கே.நகர் வாக்காளர்கள் மீது குற்றம் சொல்வது சரியல்ல: இல.கணேசன்

425 0

ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள் எதிர்பாராத ஒன்றாகும். இதற்காக வாக்காளர்கள் மீது குற்றம் சொல்வது சரியல்ல என்று பாரதிய ஜனதா எம்.பி.இல.கணேசன் கூறினார்.

பாரதிய ஜனதா எம்.பி. இல.கணேசன் கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள் எதிர்பாராத ஒன்றாகும். இதற்காக வாக்காளர்கள் மீது குற்றம் சொல்வது சரியல்ல. வாக்காளர்கள் தீர ஆராய்ந்து வாக்களித்துள்ளனர். வாக்காளர்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம்.

டி.டி.வி.தினகரன் தலைமையில் உள்ள அணி-அ.தி. மு.க. இதில் யாரை அங்கீகரிக்க வேண்டும் என்பற்காக நடந்த தேர்தலை போல இந்த இடைத்தேர்தல் அமைந்திருக்கிறது. தேர்தல் களத்தில் பாரதிய ஜனதா கட்சி இருப்பதாக மக்கள் கருதவில்லை. இது விவாதிக்கப்பட வேண்டிய வி‌ஷயம்.

அ.தி.மு.க. பிரிந்து இருப்பதால் தி.மு.க. கை ஓங்கும் என்று சொல்லப்பட்டது கற்பனை என்பது நிரூபணம் ஆகி இருக்கிறது. ஜெயலலிதா மீது ஆர்.கே.நகர் மக்கள் இன்னும் அன்பு வைத்திருக்கின்றனர் என்பதை இந்த தேர்தல் முடிவு காட்டுகிறது.

ஜெயலலிதா பெயரை சொல்லி வாக்கு கேட்டவர்கள் ஜெயித்து இருப்பதால் இந்த தேர்தலில் ஜெயலலிதா ஜெயித்து இருக்கிறார். அதே வேளையில் இந்த தேர்தல் முடிவு குறித்து சிந்திக்க வேண்டும். ஒன்றுபட்டு இருந்தால் அமோக வெற்றி பெற்று இருப்பார்கள். இப்போது அ.தி.மு.க. இரண்டாவது இடத்திற்கு சென்று இருக்கிறது. அ.தி.மு.க.வினர் அமர்ந்து சிந்திக்க வேண்டிய தருணம் இது.

ஒற்றுமையாக இருக்க போகின்றோமா? பிரிந்து இருக்க போகின்றோமா? என்பதை அ.தி.மு.க. முடிவு செய்ய வேண்டும். அ.தி.மு.க. தங்களுக்குள் அமர்ந்து இந்த முடிவு குறித்து விவாதிக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலுக்குள் அரசியல் சூழ்நிலை மாறும்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment