சுயேச்சையாக வென்று 30 ஆண்டு கால இடைத்தேர்தல் வரலாற்றை முறியடித்த தினகரன்

544 0

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன் 30 ஆண்டு கால இடைத்தேர்தல் வரலாற்றை முறியடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக தேர்தல் வரலாற்றில் 1980-ம் ஆண்டுக்கு பிறகு பல்வேறு சூழ்நிலைகளில் இதுவரை 53 முறை இடைத்தேர்தல்கள் நடந்துள்ளன. இதில், 45 முறை ஆளும் கட்சிகளே வெற்றி பெற்றுள்ளன. 8 முறை மட்டுமே எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. சுயேச்சையாக போட்டியிட்ட யாரும் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற வரலாறு கடந்த 30 ஆண்டுகளாக இல்லை.
கடைசியாக 1999-ம் ஆண்டு நத்தம் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், எதிர்க்கட்சியாக இருந்த அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் நத்தம் விஸ்வநாதன் வெற்றி பெற்றார். அதன்பிறகு, 2004-ம் ஆண்டுக்கு பிறகு நடந்த எந்த இடைத்தேர்தலிலும் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றிபெறவில்லை. தொடர்ந்து, ஆளும் கட்சி வேட்பாளர்களே வெற்றி வாகை சூடி வருகின்றனர்.
ஆனால், அந்த வரலாறுகளை எல்லாம் இப்போது ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன் தகர்த்து எறிந்திருக்கிறார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடைபெற்ற முதல் இடைத்தேர்தலிலேயே அ.தி.மு.க தோல்வியை சந்தித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment