பக்கிங்காம் அரண்மனையில் கிறிஸ்துமஸ் விருந்தின்போது இனவாதத்தை குறிக்கும் உடையில் குத்தும் ஊசியை பயன்படுத்தியதற்கு கெண்ட் இளவரசி மேரி கிறிஸ்டின் மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் பிரட்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனையில் கிறிஸ்துமஸ் விருந்து அளிப்பது வழக்கம். இந்த விருந்தில் அரச குடும்பத்தினர் கலந்துகொள்வார்கள். இந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்காக அனைத்து பிரட்டன் அரச குடும்பத்தினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
கடந்த புதன்கிழமை பிரட்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனையில் ராணி தலைமையில் விருந்து அளிக்கப்பட்டது. இதில் கேண்ட் அரண்மனையின் இளவரசியான மேரி கிறிஸ்டின் கலந்துகொண்டார். அவர் இந்த விருந்தில் கலந்து கொண்டபோது ஒரு வித்தியாசமான உடையில் குத்தும் ஊசியை பயன்படுத்தியுள்ளார்.
அந்த ஊசியானது கருப்பு இனத்தவரை அவமானபடுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டது. அந்த ஊசியை அவர் உடையில் குத்தியிருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து, விமர்சனம் செய்தனர்.
இதையடுத்து அந்த சம்பவத்திற்கு இளவரசி மேரி கிறிஸ்டின் மன்னிப்பு கேட்டுள்ளார். இதுதொடர்பாக அரண்மனை செய்திதொடர்பாளர் பேசுகையில், ‘அந்த வருத்தத்திற்குரிய சம்பவத்திற்கு இளவரசி மன்னிப்பு கோரியுள்ளார். அது அவருக்கு பரிசாக அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் பலமுறை ஆடை அவர் பயன்படுத்தியுள்ளார்’, என கூறினார்.