மகளிர் அணி செயலாளர் பதவியில் நீடிப்பேன்: கனிமொழி எம்.பி. பேட்டி

479 0

மகளிர் அணி செயலாளர் பதவியில் நீடிப்பேன் என்று கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

தி.மு.க. மகளிர் அணி செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி சென்னை ஆழ்வார்பேட்டை சி.ஐ.டி. காலனியில் உள்ள தனது இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் நீதி மன்றம் அளித்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு வாழ்த்து தெரிவித்த தலைவர்கள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசியலை தாண்டி மனிதாபிமானத்தோடு வாழ்த்து கூறிய டி.டி.வி. தினகரன், கிருஷ்ணபிரியா ஆகியோருக்கும் நன்றி.தி.மு.க.வில் எனக்கு போதிய பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதற்கு மேல் பதவி எதுவும் கேட்கவில்லை.

மகளிர் அணி செயலாளர் பதவியை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. கருணாநிதியை பிரதமர் நரேந்திரமோடி சந்தித்து நலம் விசாரித்ததை அரசியல் ஆக்க வேண்டாம்.இவ்வாறு அவர் கூறினார்.

கனிமொழி ஒரு தனியார் டி.வி.க்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-

தி.மு.க.வை ஒழிக்க வேண்டும் என்று 2ஜி வழக்கை கட்டமைத்த அனைவருக்கும் தோல்வி ஏற்பட்டுள்ளது. 2ஜியில் இழப்பு என்பதும் கட்டமைக்கப்பட்டது தான். அதன் பிறகு 3ஜி வந்த பிறகும் அரசுக்கு குறைவான வருவாய்தான் வந்தது. அதனால் கட்டமைக்கப்பட்ட வழக்கு உடைந்து போனது.

இந்த வழக்கு ஊதி பெரிதாக்கப்பட்ட வழக்கு. எதிர்க்கட்சிகள் இதை கையில் எடுத்துக் கொண்டு அடிப்படை என்ன என்று புரிந்து கொள்ளாமலேயே தி.மு.க.வை எதிர்த்து வீசக் கூடிய ஆயுதமாக இதை பயன்படுத்தினார்கள். இன்று அவை எல்லாவற்றையும் உடைத்து தி.மு.க. நிமிர்ந்து நிற்கிறது.

இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டால் அதை தி.மு.க. எதிர் கொள்ளும்.

ஜெயலலிதா வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் என்ன தீர்ப்பு வந்ததோ அதுதான் சுப்ரீம்கோர்ட்டில் நின்றது. அதனால் இப்போது கூறப்பட்டுள்ள தீர்ப்புதான் எப்போதும் நிற்கும்.

சி.பி.ஐ. தொடர்ந்த இந்த வழக்கில் அவர்களால் ஆதாரங்களை கொடுக்க முடியவில்லை. கலைஞர் டி.வி.யில் நான் 2 வாரம்தான் இயக்குனராக இருந்தேன். கலைஞர் டி.வி. ஒளிபரப்பு தொடங்கப்படும் முன்பே நான் ராஜினாமா செய்து விட்டேன். இதற்கான ஆதாரம் சி.பி.ஐ.யிடம் இருந்தது.

20 சதவீதம்தான் எனது பங்கு. ராஜினாமா செய்த பிறகு எந்த அலுவலக கூட்டத்திலும் நான் பங்கேற்கவில்லை. ஆனால் கூட்டத்தில் நான் பங்கேற்றதாக வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். அதனால்தான் இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிற்கவில்லை.

இந்த வழக்கை நான் எதிர்பார்க்கவில்லை. இதை என்னை செம்மைப்படுத்திக் கொள்வதற்கான அனுபவமாகத்தான் எடுத்துக் கொள்ள முடியும். என்னை சுற்றி இருக்கக் கூடிய அரசியலை புரிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பாக இதை கருதுகிறேன். இந்த வழக்கால் நான் துவண்டுபோகவில்லை. இந்த வழக்கை எதிர்கொள்ள நான் தயாராகவே இருந்தேன். இந்த நீதிமன்றம் நியாயமாக நடந்து கொண்டது.

இந்த வழக்கு திராவிட இயக்கங்களுக்கு எதிராக செய்யப்பட்ட சதி. திராவிட இயக்கங்களின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் பல பேர் இணைந்து செய்த சதி. தலைவர் கலைஞரும் பல வழக்குகளை சந்தித்துள்ளார். அவரது வாழ்க்கையை பார்த்து பாடம் கற்றுள்ளேன். நான் தைரியமாக இருக்க வேண்டும் என்பதுதான் அவருடைய எண்ணமாக இருந்தது. மிகப் பெரிய வழக்காக இது கட்டமைக்கப்பட்டதால் இதை உண்மை என்று யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.

2ஜி வழக்கால் காங்கிரசும் பாதிக்கப்பட்டது. அவர்களுக்கு அரசியலில் பெரிய பாதிப்பு ஏற்பட்டது. இந்த வழக்கை முன்னெடுத்துச் சென்றவர்களில் கிரெண்பேடியும் ஒருவராக இருந்தார். அதன் பிறகு அவர் பா.ஜனதாவில் இணைந்தார். இப்போது கவர்னராக உள்ளார். இப்படி இதற்கு அடிப்படை காரணமாக இருந்த பல பேர் இப்போது முக்கிய பதவிகளில் இருக்கிறார்கள். பல பேர் இதில் லாபம் அடைந்திருக்கிறார்கள்.

இந்த வழக்கு பா.ஜனதா வும், அ.தி.மு.க.வும் ஆட்சிக்கு வர உதவி செய்தது. இதையாரும் மறுக்க முடியாது. ஊழல் என்ற வார்த்தையை மற்றவர்களை நோக்கி சொல்லும் தகுதி அ.தி.மு.க. வினருக்கு கிடையாது.

ஒரு முடிவு எடுக்கும் போது எதை இழக்கிறோம். எதை வெறுக்கிறோம் என்பதை புரிந்து கொண்டுதான் அரசாங்கம் முடிவு எடுக்கும். இழப்பான பணம் ஒவ்வொரு கம்பெனியில் இருந்தும் ஒவ்வொரு நிலையிலும் வரும் என்ற நம்பிக்கை அரசுக்கு இருக்கும். இது உச்சநீதிமன்றம் கண் காணித்த வழக்கு. இது நிச்சயம் நியாயமாகத்தான் நடந்திருக்கும்.

மோடி என்னை எப்போது சந்தித்தாலும் தலைவரை பற்றி அவரின் உடல் நலம் பற்றி கேட்காமல் இருந்ததே கிடையாது. அவர் சென்னை வரும் போது கலைஞரை சந்திக்கிறார். இதை அரசியலாக பார்க்க வேண்டாம். தேர்தல் கூட்டணி தொடர்பான முடிவுகளை எடுக்கக் கூடிய இடத்தில் நான் இல்லை. பா.ஜனதாவுக்கும், எங்களுக்கும் பல விசயங்களில் கருத்து வேறுபாடு இருக்கிறது.

மதத்தை வைத்து கொண்டு அரசியல் செய்வதை தி.மு.க. ஏற்றுக் கொள்ளாது. பகுத்தறிவாதிகள் என்று சொல்ல தி.மு.க. எப்போதும் தயங்காது.

2ஜி வழக்கில் நான் எந்த தவறும் செய்யவில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன். இது பொய்யாக ஜோடிக்கப்பட்ட வழக்கு. இந்த வழக்கை காங்கிரஸ் போடவில்லை. சி.பி.ஐ.தான் வழக்கு தொடர்ந்தது. நான் அடிக்கடி நீதிமன்றத்துக்கு வரவேண்டி இருந்ததால் வேறு வி‌ஷயங்களில் கவனம் செலுத்த முடியாமல் போனது. இப்போது அந்த பிரச்சினை இல்லை என்பதால் அரசியலில் முழுமையாக ஈடுபட முடியும். நான் நேரடியாக மக்களை சந்திக்கும் தேர்தல் களத்துக்கும் தயாராக உள்ளேன். ஆனால் அதை தலைமை தான் முடிவு செய்ய முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment