சுனாமி நினைவு தினத்தையொட்டி இந்தாண்டு மெரினா கடற்கரையில் மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்த போலீசார் தடை விதித்துள்ள நிலையில், பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை பகுதியில் நடத்த அனுமதி அளித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் கடந்த ஆண்டு நடந்த போராட்டம் போலீசாரை திக்கு முக்காட செய்துவிட்டது. மாணவர்களும், இளைஞர்களும் மெரினா கடற்கரையில் அலை அலையாய் கூடினர். விவேகானந்தர் இல்லம் எதிரில் திரண்ட பல்லாயிரக்கணக்கானோரை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்குள் போலீசார் படாத பாடுபட்டனர். இதன் பிறகு அவ்வப்போது பல்வேறு பிரச்சினைகளுக்காகவும் இளைஞர்கள் மெரினாவில் திரள இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது.
குறிப்பாக விவசாயிகள் பிரச்சினை, மீத்தேன் விவகாரம் தொடர்பாக இளைஞர்கள் கூடி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக வெளியான தகவல்களால் மெரினாவில் எப்போதுமே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நேப்பியார் பாலத்தில் தொடங்கி கலங்கரை விளக்கம் விரையில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. மெரினாவில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
போலீஸ் தடையை மீறி யாரும் போராட்டத்தில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதற்காக போலீசார் மெரினா முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள் ளனர்.
நாளை மறுநாள் சுனாமி நினைவு தினத்தையொட்டி மெரினாவில் வழக்கமாக மீனவர்கள் செலுத்தும் அஞ்சலிக்கும் இந்த ஆண்டு திடீரென தடை விதிக்கப்பட்டுள்ளது. நேப்பியார் பாலத்தில் தொடங்கி கலங்கரை விளக்கம் வரையில் உள்ள பகுதியில் நினைவு அஞ்சலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
அதே நேரத்தில் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை பகுதியில் மீனவர்கள் அஞ்சலி செலுத்துவதற்கு எந்த தடையும் இல்லை என்றும், அங்கு மீனவர்கள் அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.